திருமணமாகி, கணவனை இழந்த ஒரு பெண் தனக்கான ஒரு துணையை தேர்வு செய்து கொள்வது என்பது இந்த சமூகத்தில் அவ்வளவு எளிது கிடையாது.
என்னதான் நாகரீகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று பேசினாலும், கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்கள், இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள இந்த சமூகம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை.
அந்த பெண்ணின் உணர்வுகளையும் மதிக்காமல், அவரது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்காமல், கண்டும் காணாமல் விலகி செல்லும் போக்கு இன்றளவும் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தான் தனிமையில் வசித்த தன் தாய்க்கு 2 வது திருமணம் செய்து வைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் பிரசிதா.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன். இவருக்கு 59 வயதாகிறது. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு.
இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று யோசித்தார்.

இதனால் தனது தாய்க்கு எப்படியாவது மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்த பிரசிதா தாய்க்கு ஏற்ற ஒரு நல்ல துணையை தேட ஆரம்பித்தார்.
மாப்பிள்ளை தேடுதல் நடந்த போது, அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63), தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதாவுக்கு தோன்றியது.
2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்றும் உருக்கமாக கேட்டார் பிரசிதா.

இதனை புரிந்து கொண்ட திவாகரன் மறுமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண் குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார்.
தனது தந்தையும் தனிமையில் இருப்பதை உணர்ந்த அவரது மகள்கள், தனது தந்தைக்கு இரண்டாவது முறையாக மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தனர்.
க்ரீன் சிக்னல் கிடைத்ததால் சந்தோசம் அடைந்த பிரசிதா தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தையும் பெற்றார்.
திருச்சூர் திருவம்பாடி கோயிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்த அவர் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா, ”எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள்.
அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார்.
எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமணம்” என்று கூறியுள்ளார்.
வழக்கமாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று சொல்லித்தான் கேள்வி பட்டிருப்போம்.
ஆனால் இங்கு மகள்கள் நிச்சயித்து திருமணம் நடைபெற்றிருக்கிறது. இது, இன்றைய தலைமுறை தனிமனித உணர்வை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்









