உங்களுக்கு கண் கருவளையம் இருக்கா? வைட்டமின் குறைபாடாகவும் இருக்கலாம்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Dark circles under eyes Also caused by vitamin deficiencies

கண்ணில் கருவளையம் ஏற்படுவது அழகு பிரச்னை மட்டுமல்ல, வைட்டமின் குறைபாடுகள் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஆண், பெண் என இரு பாலருக்கும் உள்ளது. முந்தைய காலங்களில் இது வயது முதிர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வந்தது. ஆனால் தற்போது இளம் வயதினர் இடையே கண்ணில் கருவளையம் காணப்படுகிறது. கண்ணில் கருவளையம் வருவதை நாம் அழகு சார்ந்த பிரச்னையாக கருதிவிடுகிறோம். அதாவது, பெரும்பாலும் சோர்வு, மன அழுத்தம் அல்லது வயதானதற்கான அறிகுறிகளாக கண் கருவளையத்தை நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பெரிய அளவில் கருவளையம் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ADVERTISEMENT

இரும்புச் சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடுகளும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. இவை ரத்த ஓட்டம், கொலஜன்கள் உற்பத்தி, சருமத்தை பாதிக்கிறது. கண்ணில் கருவளையம் பிரச்னைக்கு எந்தெந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக அமைகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு:

ADVERTISEMENT

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் இரத்த சோகையுடன் தொடர்புடையவை. இது உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தைக் குறைக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது, ​​தோல் பெரும்பாலும் வெளிர் நிறமாகி, கண்களுக்குக் கீழே உள்ள நீல-ஊதா நிற இரத்த நாளங்கள் அதிகமாகத் தெரியும். இதனால் கண்ணில் கருவளையம் உருவாகிறது. பி12 குறைபாடு என்பது ரத்த சிவப்பணுக்கள் உருவாவதை குலைத்து கண்ணுக்கு கீழே கருப்பு நிறத்தை உருவாக்குகிறது.

வைட்டமின் சி குறைபாடு

ADVERTISEMENT

கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் தோல் மெல்லியதாகவும் மற்றும் மீள் தன்மை குறைவாகவும் இருக்கும். கண்களுக்கு கீழே ரத்த நாளங்கள் அதிகமாக வெளியே தெரியவைக்கிறது. 2017 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வைட்டமின் சி கண்ணுக்கு கீழே உள்ள கருவளையங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைட்டமின் கே குறைபாடு

ரத்தம் உறைவதற்கும், ரத்த நாளங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதற்கும் வைட்டமின் கே முக்கியமானது. இவை கண்களுக்கு கீழே உடையக்கூடிய, பலவீனமான ரத்தநாளங்களை ஏற்படுத்துகிறது. வைட்டமின் கே எடுத்துக்கொள்வது கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களைக் குறைக்கிறது. ரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது.

வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி செல் புதுப்பித்தல், கொலாஜன் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. வைட்டமின் டி போதுமானதாக இல்லாதபோது, ​​சரும அமைப்பு பலவீனமடைகிறது, மேலும் கண்களுக்குக் கீழே உள்ள கருமையான பகுதிகள் அதிகமாகத் தோன்றக்கூடும்.

மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள்:

மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஃபோலேட் குறைபாடுகள் கருவளையங்கள் வர காரணமாக உள்ளது. அதிக அளவு மெக்னீசிய குறைபாடு இருந்தால் கண்களை சுற்றி வீக்கம் உடன் கூடிய கருவளையம் காணப்படும்.

கருவளையங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்

கூடுதலாக வாழ்க்கை முறை மற்றும் பிற மரபணு காரணிகள் கருவளையங்களை ஏற்படுத்தக்கூடும். சரியாகத் தூங்காமல் இருப்பது, நீரிழப்பு, ஒவ்வாமை, மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான செல்போன், லேப்டாப் பார்ப்பது, கருவளையங்கள் வர முக்கிய காரணமாக உள்ளது.

கரு வளையங்களைத் தடுக்க போதுமான தூக்கம், நீர் அருந்துதல், ஆரோக்கியமான உணவு, சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு, மற்றும் வைட்டமின் சி, இ நிறைந்த கிரீம்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அளவில் கருவளையம் இருக்கிறது என்பதை அறிய ஒரு முறை தோல் மருத்துவரை அணுகுவதும் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share