சசிகலா கோரிக்கையை ஏற்ற ரஜினி

Published On:

| By Balaji

ரஜினிகாந்த் நடித்து கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான தர்பார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளியிட்டது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி இருக்கும் தர்பார் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சர்ச்சைப் பொருளாக மாறியது.

ADVERTISEMENT

படத்தில் இடம்பெற்றுள்ள ‘காசு கொடுத்தா ஷாப்பிங் கூட போகலாம்’ என்ற வசனம் விவாதத்திற்கு உள்ளானது. அந்த வசனம் சிறையில் இருக்கும் சசிகலாவை குறிப்பதாகப் பலரும் கூறி வந்தனர், இதற்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் இந்த வசனத்திற்கு சசிகலா தரப்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக வசனத்தை நீக்க வேண்டும் என்று அவர்கள் படக்குழுவை அறிவுறுத்தினர்.

இந்நிலையில் இது குறித்து லைக்கா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ‘இந்த குறிப்பிட்ட வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால், அது படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வசனம் சர்ச்சைக்குள்ளான விவகாரம் ரஜினிக்கு தெரியப் படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தயாரிப்பாளர் தரப்பிடம் பேசிய ரஜினிகாந்த், வசனம் நீக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட சொல்லியுள்ளார். அதன்பிறகே லைக்கா இவ்வாறு அறிக்கை வெளியிட்டது.

இதற்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த தகவல் சிறையிலுள்ள சசிகலாவுக்கும் தெரியப் படுத்தப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share