ஹாலிவுட், பாலிவுட் (இந்தி) படங்கள் என தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்துவருகிறார் தமிழ் நடிகரான தனுஷ். ராஞ்சனா மற்றும் ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து இந்தியில் தனுஷ் நடிக்க உருவாகிவரும் படம் ‘அட்ராங்கி ரே’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ராஞ்சனா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அட்ராங்கி ரே படத்துக்காக தனுஷூடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். தனுஷூடன் அக்ஷய்குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்துவந்தது. தனுஷூக்கான படப்பிடிப்புக் காட்சிகள் கடந்த 2020 டிசம்பருடன் நிறைவுப் பெற்றது. இந்தப் படத்துக்கான சில காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய அப்டேட் என்னவென்றால், அட்ராங்கி ரே படத்துக்கான முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதை இன்ஸ்டாவில் புகைப்படமொன்றை பதிவிட்டு உறுதி செய்துள்ளார் தனுஷ். அதோடு, இயக்குநருக்கு நன்றியையும் அன்பையும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் ஹாலிவுட் படமான க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், க்ரே மேன் படத்துக்கானப் படப்பிடிப்பு ஜூன் மாதத்துடன் முடியும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் தனுஷ் 43 படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் தனுஷ். ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும், நேரடியாக கார்த்திக் நரேன் படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார். இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ஓடிடியில் ஜெகமே தந்திரம் படமும் , அதன்பிறகு, பாலிவுட் படமான அட்ராங்கி ரே படமும் இந்த வருடத்திற்கான தனுஷின் ரிலீஸ் ஷெட்யூல் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்க… !
**- ஆதினி**
.
