தமிழகத்தில் தினமும் 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை பகுதிகளில் மது பாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்று, திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வழிவகை செய்யும், ‘காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்’ மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 5) விசாரணைக்கு வந்தது.
அப்போது, திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், நாளொன்றுக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படுவதாகவும், மாதத்துக்கு 21 கோடி பாட்டில்கள் வரையிலும் ஆண்டுக்கு 252 கோடி பாட்டில்கள் வரையிலும் விற்கப்படுவதாகவும் வாய் மொழியாக தெரிவிக்கப்பட்டது.
நாளொன்று 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்படுவதாக கூறிய தகவலை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைதொடர்ந்து காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மருத்துவ அறிவில்லை… சிறையில் தள்ள வேண்டும் : மருத்துவரின் பதிவுக்கு சமந்தா பதில்!