சூதாட்ட புகார்களில் சிக்கி, கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் பெயர் படுபாதாளத்திற்குச் சென்ற காலமது. கேப்டனாக பொறுப்பேற்றிருந்த சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை கேள்விக்குறியான காலமது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் புதிய ஜாம்பவான்களை இந்தியா உருவாக்குவது கடினம் என்று சொல்லப்பட்ட காலமது. அப்போது, தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சியால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சௌரவ் கங்குலி. dada ganguly biopic get into big screen
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டிசர்ட்டை கழற்றித் தலைக்கு மேலே சுற்றி வெற்றியைக் கொண்டாடியது, தான் வலிய அழைத்து வந்த பயிற்சியாளர் கிரெக் சேப்பல் உடன் மோதலைக் கடைப்பிடித்தது, சச்சினுக்குப் போட்டியாக சேவக்கை தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கியது என்று கங்குலியைச் சுற்றிச் சுழன்ற சர்ச்சைகள் ஏராளம்.
அவ்வளவு ஏன், 1992இல் வெளிநாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றபோது ‘என்னால் கூல்ட்ரிங்ஸ் எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது’ என்று முறைப்பையும் விறைப்பையும் காட்டியவர். அப்போது தேர்வுக்குழுவால் புறக்கணிக்கப்பட்டவர், நான்காண்டுகளுக்குப் பிறகே மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்தில் தான் ஆடிய முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து, தனக்கான இடத்தைத் தேடிக் கொண்டவர்.

இப்படித் திருப்பங்கள் பல நிறைந்தது சௌரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை. இது போகத் தனிப்பட்ட வாழ்விலும் சில சர்ச்சைகளைச் சந்தித்தவர்.
உப்புச்சப்பில்லாத வாழ்க்கை வரலாறுகளே திரைப்படங்களாகிக் கொண்டாடப்படுகிற காலத்தில், இப்படியொரு கிரிக்கெட் பிரபலம் குறித்த ‘பயோபிக்’ வந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும்? அப்படித் தன்னை அணுகிய எவருக்கும் ‘ஓகே’ சொல்லாத சௌரவ் கங்குலி, சமீபத்தில் அப்படியொரு முயற்சிக்குத் தலையாட்டியிருக்கிறார்.
சமீபத்திய பேட்டியொன்றில், தனது ‘பயோபிக்’ அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் நாயகனாக நடிக்கிறார்.

“ஜனவரியில படப்பிடிப்பு ஆரம்பமாகுது. அதுக்கு முன்னால திரைக்கதையாக்கம், முன் தயாரிப்பு பணிகள் எல்லாம் முடிய கால அவகாசம் அதிகமா தேவைப்படுது” என்று இப்படம் குறித்து ‘அப்டேட்’ தந்திருக்கிறார் சௌரவ் கங்குலி.
2000களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிய மூவர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் ட்ராவிட் மற்றும் சௌரவ் கங்குலி.
சௌரவ் மட்டுமே மற்ற இருவரை விடவும் செய்திகளில் அதிகம் அடிபட்டவர். அன்று மட்டுமல்ல, இன்றும் அதே கதைதான். துணிச்சலான முடிவுகளும் அதில் உறுதியாக நிற்கிற தைரியமும்தான் அவரது தனித்துவமான அடையாளம். அவற்றோடு இதர பல சமாசாரங்களும் இந்த ‘கங்குலி பயோபிக்’கில் இடம்பெறும் என்று நம்புவோம்..!