வழமையான கமர்ஷியல் படத்தில் ரசனைமிகு நுணுக்கங்கள்!
கன்னடப் படவுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகத் திகழ்பவர் தனஞ்ஜெயா. நடிகராக மட்டுமல்லாமல், கதாசிரியராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராகத் திகழ்பவர். விக்ரம் பிரபு நடித்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் வில்லனாக நடித்தவர். ‘புஷ்பா’வில் ஜாலி ரெட்டியாக வந்து ரசிகர்களை அலறவிட்டவர். தனஞ்ஜெயா படங்கள் வித்தியாசமானதாக நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பே, அவர் பெற்றிருக்கும் நட்சத்திர அந்தஸ்துக்கு நியாயம் சேர்க்கும்.
தற்போது, தனஞ்ஜெயா நாயகனாக நடித்துள்ள ‘கோடி’ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மோக்ஷா குஷால், ரமேஷ் இந்திரா, தாரா, ரங்காயன ரகு, பிருதிவி ஷனனூர், தனுஜா வெங்கடேஷ், ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனரான பரம் இயக்கியுள்ளார்.
’கோடி’ ட்ரெய்லரைப் பார்த்தபோது, வழக்கமான கமர்ஷியல் படம் என்பதைத் தாண்டிச் சில சிறப்பம்சங்கள் இருக்குமென்ற எதிர்பார்ப்பு எழுந்தது. படம் அதனைச் சாதித்திருக்கிறதா?
யார் இந்த கோடி?
ஜனதா நகரில் வாழும் ஒரு சாதாரண மனிதன் கோடி (தனஞ்ஜெயா). ‘நல்லவனாக வாழ்வதே தனக்குத் திருப்தியளிக்கக் கூடியது’ என்ற கொள்கையைக் கொண்டவர். பொய் சொல்லவோ, திருடவோ, குற்றச்செயல்களில் ஈடுபடவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்றெண்ணுபவர்.
சிறு வயதில் தந்தையை இழந்த காரணத்தால் தாய் (தாரா), தம்பி நாச்சி (பிருத்வி ஷனனூர்), தங்கையின் (தனுஜா வெங்கடேஷ்) மனம் புண்படாமல் பார்த்துக் கொள்கிறார் கோடி. அதேநேரத்தில், நியாயமான முறையில் சம்பாதித்து கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பது அவரது லட்சியம்.
வீடு ‘ஷிப்ட்’ செய்யும் பணியைச் செய்து வரும் கோடி, இன்னொரு புறம் டாக்ஸி ஓட்டும் வேலையையும் மேற்கொண்டு வருகிறார். சொந்தமாக ஒரு கார் வாங்கி, அதனைத் தனது தம்பிக்குக் கொடுக்க விரும்புகிறார். தங்கைக்கு நல்லதொரு வரன் அமைந்தால் திருமணம் செய்து கொடுக்கலாம் என்றெண்ணுகிறார்.
அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தனது கொள்கைகளைக் கைவிட்டு கடன் வாங்க முடிவு செய்கிறார் கோடி. ஜனதா நகரில் பிரபல பைனான்சியராகவும் கேங்க்ஸ்டராகவும் இருக்கும் தினு சாவ்கரை (ரமேஷ் இந்திரா) சந்திக்கிறார்.
தான் விரும்புவது நடக்க வேண்டுமென்றால் எதையும் செய்யத் தயாராக இருப்பவர் தினு சாவ்கர்.
அவர் தரப்பில் நடத்தப்படும் அட்டூழியங்களைப் பார்த்தாலும், ‘எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று நடந்து கொள்பவர் கோடி. அது தினு சாவ்கருக்கும் தெரியும்.
மீட்டர் வட்டியில் வாங்கிய கடனுக்குத் தினமும் வட்டியைத் திரும்பச் செலுத்தும் கோடியை, தினு சாவ்கர் அவ்வளவு சீரியசாக கருதுவதில்லை. ஒருநாள் அவரது நினைப்பு மாறுகிறது.
துப்பாக்கி சுடுவதில் கோடியிடம் இருக்கும் அபார திறமை அவரை மலைக்க வைக்கிறது. அகமதாபாதில் தீபாவளியன்று ஒருவரைக் கொல்வதற்காக, ஒரு கேங்க்ஸ்டரிடம் பணம் பெறுகிறார் தினு சாவ்கர். அந்த வேலையைச் செய்பவரின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. அதேநேரத்தில், சொன்ன வேலையைச் செய்யாவிட்டால் வம்பு வந்து சேரும்.
அதனால், அந்த வேலைக்கு கோடியை அனுப்பத் துடிக்கிறார் தினு சாவ்கர். அவரோ, ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் விரும்பாத எந்தவொன்றையும் செய்ய மாட்டேன்’ என்று மறுத்துவிடுகிறார்.
பணத்திற்கும், தன்னைக் குறித்த பயத்திற்கும் அஞ்சாத கோடியைத் தந்திரமாகத்தான் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று பொருமுகிறார் தினு சாவ்கர்.
இந்த நிலையில், ஒரு திருட்டுக் கும்பல் வீடு புகுந்து கொள்ளையடிக்கிறது. அது தெரியாமல், அந்த ‘ஷிப்ட்’டிங்கில் தனது வேலையாட்களுடன் ஈடுபடுகிறார் கோடி. அது போலீசாருக்கு தெரியவரும்போது, வீட்டு உரிமையாளர் தனக்கு 22 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்கிறார்.
சாவ்கரிடம் கடன் வாங்கிய பணத்தில் கோடி வாங்கிய புதிய கார் திருடு போகிறது. அதன் மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்.
ரமணா (ரங்காயன ரகு) என்பவரோடு கோடிக்கு மோதல் ஏற்பட, அதன் தொடர்ச்சியாக கோடி வீட்டுக்கு வந்து அவர் ரகளை செய்கிறார். அப்போது கோடியின் தாயை அவர் அடித்துவிடுகிறார். அதனால், தாயின் காது கேட்காமல் போகிறது. அந்தப் பிரச்சனையைச் சரி செய்வதற்கான அறுவைச்சிகிச்சைக்கு எட்டு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
சாவ்கரிடம் வாங்கிய கடன் கோடியின் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்குகிறது. இந்த நிலையில் புதிதாகச் சில பிரச்சனைகள் வேறு.
’தீபாவளிக்கு முந்தைய நாள் கடனைத் திரும்பத் தராவிட்டால் நான் சொன்னவாறு அகமதாபாதுக்கு ரயில் ஏற வேண்டியிருக்கும்’ என்று தனது அடியாட்களை விட்டு கோடியை மிரட்டுகிறார் தினு சாவ்கர்.
நல்லவனாக வாழ வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கோடி என்ன செய்தார்? தினு சாவ்கர் சொல்வதை ஏற்றாரா அல்லது மறுத்தாரா? பிறகு என்ன நடந்தது என்பதுடன் ‘கோடி’ முடிவடைகிறது. கூடவே, கோடியைச் சுற்றி நடக்கும் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதையும் சொல்கிறது.
’யார் இந்த கோடி’ என்ற கேள்விக்குத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே இயக்குனர் பதில் சொல்லிவிடுவதால், ‘ஏன் இவர் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்’ என்ற கேள்வியே நம்முள் எழுவதில்லை.
அந்த அளவுக்குக் கோடியைப் பற்றியும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் குறித்தும் தெள்ளத்தெளிவான சித்திரத்தை நமக்குத் தந்துவிடுகிறது திரைக்கதை. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
நுணுக்கமான ‘டீட்டெய்லிங்’!
கமர்ஷியல் ஹீரோக்கள் ஒரு படத்தில் என்னவெல்லாம் செய்வார்கள்? நாயகியோடு கைகோர்த்து டூயட் பாடுவார்கள். வில்லன்களை அடித்து துவைப்பார்கள். குடும்பத்தினரிடம் பாசத்தைக் கொட்டுவார்கள். இவையனைத்தையும் இந்த படத்தில் ‘அச்சுப்பிசகாமல்’ செய்கிறார் தனஞ்ஜெயா. ஆனாலும், இதில் அவரது பாத்திரம் வித்தியாசமானதாகத் தென்படுகிறது. அந்த கதாபாத்திரத் தேர்வுதான் அவரை நாம் உற்றுநோக்கக் காரணமாகிறது.
நாயகனை மையப்படுத்திய கதையில் நாயகிக்கு இடமே இல்லையே என்று தோன்றலாம். ஆனால், ’எனக்கு விக்கல் எடுக்கும்போதெல்லாம் எதையாவது திருடும் எண்ணம் ஏற்படும்’ என்ற நாயகியின் குணாதிசயம் அதனைத் தலைக்கீழாக்குகிறது. அதுவே, நாயகி மோக்ஷா குஷாலின் மீது நம் கவனம் பதியக் காரணமாகிறது. அழகுப்பதுமையாக பல காட்சிகளில் தெரிந்தாலும், அவருக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளும் இதிலுண்டு.
நாயகன் படத்தில் கமலின் தங்கையாக வந்த தாரா, இதில் நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். பழைய கன்னடப் படப் பாடல்களை விரும்பிக் கேட்பதாக அமைந்துள்ளது அவரது பாத்திரம்.
தனஞ்ஜெயாவின் தம்பியாக நடித்துள்ள பிருத்வி ஷனனூர் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது. போலவே, தங்கையாக நடித்துள்ள தனுஜா வெங்கடேஷ் ‘யார் இந்த தேவதை’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.
இவர்கள் தவிர்த்து இன்ஸ்பெக்டராக வரும் சர்தார் சத்யா, வில்லனின் அடியாளாக வரும் அபிஷேக் ஸ்ரீகாந்த் ஆகியோரது முகங்கள் நம் மனதில் பதிகின்றன.
நாயகனின் பாத்திரம் நம்மை ஈர்க்க வேண்டுமானால், திரைக்கதையில் வில்லனின் இருப்பு வலுவானதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்ப, திரையில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது தினு சாவ்கராக வரும் ரமேஷ் இந்திராவின் நடிப்பு.
ஒரு பழைய தியேட்டரில் அவர் தனது மனைவியோடு (ஜோதி தேஷ்பாண்டே) பேசிக்கொண்டும், சமைத்துக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பதாக உள்ள காட்சிகள் ‘செம’.
இப்படி ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்துவமாக வடிவமைத்து இருக்கும் இயக்குனர் பரம், அவர்களது மனப்பாங்கையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் வசனங்களை அமைத்திருக்கிறார்.
’ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு திருடன் இருக்கிறான்’ என்று ரமணா பாத்திரம் கருதுவதும் அதிலொன்று. நாயகனையும், அவனது தாயையும் தவிரப் படத்தில் மற்றனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு.
இந்தக் கதையில் நாயகன் ஏன் இவ்வளவு நல்லவனாக இருக்கிறான் என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு. அதற்குப் பதில் அளிக்கும் வகையில், அவரது தந்தையாக துனியா விஜய் பிளாஷ்பேக் காட்சியில் வந்து போயிருக்கிறார்.
இத்தனை கதாபாத்திரங்களையும் திரையில் அழுத்தமாகக் காட்டும் வகையில் ‘நுணுக்கமான டீட்டெய்லிங்’கை திரைக்கதை முழுக்கக் கொட்டியிருக்கிறார் இயக்குனர் பரம். அதுவே, வழமையான கமர்ஷியல் மசாலா படங்களில் இருந்து ‘கோடி’யை வேறுபடுத்திக் காட்டுகிறது.
வாசுகி வைபவ்வின் இசையில் ’மன மன’, ’மாது சோது’, ‘ஜனதா சிட்டி’, ‘சோபனே’, ’மாதவ மமவா’ பாடல்கள் அனைத்தும் சட்டென்று நம்மைக் கவர்கின்றன.
காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறுபட்ட மன உணர்வுகளை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது நோபின் பால் பின்னணி இசை.
அருண் பிரமாவின் ஒளிப்பதிவு, கண்களுக்கு குளுமையான ‘விஷுவல்’களை காட்டுகிறது.
வீடு ‘ஷிப்ட்’ செய்யும் நிறுவனம், மகா நவமி அன்று நடைபெறும் புலி வேட நடனம் சம்பந்தப்பட்ட காட்சிகள், கிளைமேக்ஸில் புலி வேடம் இட்டவர்களுடன் தியேட்டர் பின்னணியில் அமையும் சண்டைக்காட்சியில் கலை இயக்குனர் குணா கரண் குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகிறது.
இந்த படத்தின் பலம் என்று படத்தொகுப்பினைச் சொல்லலாம். மிகக்கூர்மையாகக் காட்சிகளை வெட்டாமல், சில மனிதர்களின் வாழ்வை நேரில் காணும் வகையில் ஷாட்களை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீக் ஷெட்டி. திரையில் அவர் மௌனத்திற்குத் தந்திருக்கும் இடம் அதனைச் சாத்தியப்படுத்துகிறது.
இயக்குனர் பரம் அமைத்துள்ள திரைக்கதையும் அதற்கு ஏற்றவாறு இருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். இந்தப் படத்தின் கதை மிகச் சாதாரணமானது. ஆனால், அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகப் பாத்திரங்கள் வார்ப்பில் தொடங்கிப் படிப்படியாகப் பரபரப்பை அதிகப்படுத்தும் காட்சியமைப்பு வரை ‘டீட்டெய்லிங்’கில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் பரம். கிளைமேக்ஸ் முடிந்தபிறகும் கூட, சில நிமிடங்கள் ஓடும்படியாகச் சில பின்குறிப்புகளைத் தருகிறார். அதுவே, படம் முழுக்க எப்படிப்பட்ட நிதானத்தை அவர் புகுத்தியிருக்கிறார் என்பதற்கான சான்று.
அதனைச் செய்திராவிட்டால் ‘கோடி’ நிச்சயம் ‘பப்படம்’ ஆகியிருக்கும்; நேர்த்தியற்ற ஒரு கமர்ஷியல் படமாக மாறியிருக்கும்.
ஒரு ரசிகனைப் படத்தோடு ஒன்றவைக்க, குறிப்பிட்ட கால அவகாசம் நிச்சயம் தேவை. அதேநேரத்தில், தற்கால ரசிகர்கள் மொபைலில் ‘ஷார்ட்ஸ்’ பார்ப்பவர்கள் என்பதையும் கருத்தில் கொண்டாக வேண்டும். அனைத்தையும் அலசி ஆராய்ந்தபிறகும், ‘கோடி’யை அவர் ரசித்து இழைத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஓடிடியில் வெளியாகும்போது, கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் ’கோடி’யை ரசிப்பார்கள். பரம் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
இடைத்தேர்தல் : வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகங்கள்… பட்டியலிட்ட ராமதாஸ்
ரூ.100 கோடியை எட்டுமா விஜய் சேதுபதியின் ’மகாராஜா’? வசூல் நிலவரம் என்ன?