இன்று (ஜூலை 15) காலை திமுகவின் தீவிர உடன்பிறப்புகள் கட்சிப் பத்திரிகையான முரசொலியை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தபோது, தலையங்கத்தைப் பார்த்து குழம்பிவிட்டார்கள். ஏனெனில் தலையங்கத்தின் கீழே அதை எழுதியவர் என்ற பொருள் படும் வகையில் வள்ளலார் என்று அச்சாகியிருந்தது.
அதைப் படித்துப் பார்த்தபிறகுதான் குழப்பத்தின் பின்னணி தெரியவந்தது. கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்து, ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டோம்’ என்ற தலைப்பில் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.
தலையங்கத்தின் இறுதிப் பத்தியில், ‘வைகோவின் உரையாசிரியர்ப் பேருரையும், கழகத் தலைவரின் போர்க்குரலும், அதனை இலாவகமாக வழிமொழிந்து எடுத்துச் சொன்ன ப.சிதம்பரத்தின் உறுதியும்… அறிவின் வழி ஞானமடைந்த துறவி வானத்தின் மீது மயிலாடக் காண்பது போல, ஞானம் கைவரப் பெற்று பேரின்பத்தை அனுபவிப்பது போல நாம் உணருகின்றோம். (இங்கே வானம் என்பது மனிதனின் தலை உச்சி வான் நோக்கியது என்பதாம்)இந்த உணர்ச்சி வரும் காலமும் கைவரக் கூடும் என்றே கவிப்பேரசு வைரமுத்துவின் நூல் நம்மை எச்சரிக்கை எக்காளமிடச் செய்திருக்கிறது’ என எழுதிவிட்டு பத்தியின் இறுதியில்
’வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’ என்ற வள்ளலாரின் பாடலோடு தலையங்கத்தை முடித்திருந்தார் தலையங்க ஆசிரியர்.
வள்ளலார் என்ற சொல் அந்தப் பாட்டின் அருகிலேயே இடம்பெற்றிருந்தால் குழப்பம் வந்திருக்காது. ஆனால், ஒட்டுமொத்த தலையங்கத்தையே எழுதியவர் போல வள்ளலாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதுதான் முரசொலி தலையங்கத்தை எழுதியது வள்ளலாரா என்ற கேள்வியை பார்ப்போர் மனதில் எழுப்பிவிட்டது.
“கலைஞர் இருக்கும்போது தினமும் ஏன் சென்னையில் இருந்தால் ஞாயிற்றுக் கிழமை கூட முரசொலி சென்று அனைத்து பக்கங்களையும் வரைகலையோடு ஒருமுறை பிழை திருத்துவார். இப்போது கலைஞர் போல முரசொலியை நேசித்து சுவாசிக்கிறவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தப் பிழை எழுத்தாளரின் பிழை அல்ல. வரைகலை செய்தவரின் பிழை” என்கிறார்கள் முரசொலியின் மூத்த வாசகர்கள்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**




