தங்க வேட்டைக்குத் தயாராகும் இந்தியா!

Published On:

| By Balaji

உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி, 14ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானுடன் இன்று விளையாடவுள்ளது. இன்று நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஆசிய போட்டி வரலாற்றின் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்தியா தனது இரண்டாவது தங்கத்தை கைப்பற்றும். மேலும் இது 1982ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா வெல்லும் முதல் தங்கமாகவும் பதிவாகும்.

இந்திய அணி இந்தத் தொடரில் லீக் ஆட்டங்களில் இந்தோனேசியாவை 8-0 எனவும், கஜகஸ்தானை 21-0 எனவும், கொரியாவை 4-1 எனவும், தாய்லாந்தை 5-0 எனவும் வீழ்த்தியிருந்தது. அரையிறுதியில் சீனாவை 1-0 என வென்றிருந்தது.

ADVERTISEMENT

ஜப்பானைப் பொறுத்தவரை லீக் ஆட்டங்களில் சீன தைபேவை 11-0 எனவும், ஹாங்காங்கை 6-0 எனவும், சீனாவை 4-2 எனவும், மலேசியாவை 3-1 எனவும் வீழ்த்தியிருந்தது, கொரியாவுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் 2-0 என வெற்றி பெற்றிருந்தது.

ADVERTISEMENT

இந்த இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும், இந்தப் போட்டியில் வெற்றி பெற அனைத்து விதத்திலும் தயாராக இருப்பதாகவும் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி தெரிவித்துள்ளார். மேலும் “இந்தப் போட்டியின் முடிவில் ஒரே ஒரு விஷயத்தை தான் சாதிக்க விரும்புகிறோம். டோக்கியோவில் நடக்கக்கூடிய 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதே அது” என்றும் கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகள், சுனைனா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் நடப்பு சாம்பியன் மலேசியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

வெற்றி குறித்துப் பேசிய ஜோஷ்னா சின்னப்பா, “நான் நேற்று வருத்தமாக இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் விரும்பியது போல் என்னால் விளையாட முடியவில்லை. இதிலிருந்து நான் மீண்டுவர பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளரின் வார்த்தைகள் மிகவும் உதவிகரமாக இருந்தது. இன்று நான் நானாக இருக்க விரும்பினேன். நிகோல் (மலேசிய வீராங்கனை) ஒரு சாம்பியன். எப்போதும் சிறப்பாக ஆடக்கூடியவர். இன்றும் அப்படித் தான் ஆடினார். அவரை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குத்துச் சண்டை 49 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் அமித் பங்கல், பிலிப்பைனைச் சேர்ந்த கார்லோ பாலமை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share