புயல் உருவாக இருக்கும் நிலையில் ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியுள்ளது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கே 990 கிலோமீட்டர் தொலைவில் வங்க கடலில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகும் என்றும் இதற்கு தாய்லாந்து பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மோன்தா புயல் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முன்னதாக வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
