வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் தற்போது வலுவிழந்த நிலையில் நகர்ந்தாலும் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வானிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தாலும், நாம் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்.
“புயல் கரை கடந்துவிடும்”, “மழை குறைந்துவிடும்” என்று யாரும் அசால்ட்டா இருக்க வேண்டாம். புயல் நெருங்கும் போதும், கடந்த பின்னரும் அதன் தாக்கம் இருக்கக்கூடும். திடீரென கனமழை கொட்டலாம்; பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படலாம்; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம்.
எந்தச் சூழலையும் சமாளிக்க, உங்கள் வீட்டில் இந்த “Cyclone Safety List” இப்போதே தயாராக இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
- எமர்ஜென்சி கிட் (Emergency Kit): காற்று பலமாக வீசும்போதோ அல்லது கனமழை பெய்யும்போதோ மின்சாரம் நிறுத்தப்படலாம்.
• டார்ச் லைட்: கையில் எப்போதும் இருக்கட்டும் (கூடுதலாக பேட்டரிகள் அவசியம்).
• மெழுகுவர்த்தி & தீப்பெட்டி: ஈரம் படாதவாறு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வையுங்கள்.
• பவர் பேங்க் (Power Bank): கரண்ட் எப்போது வரும்னு தெரியாது. மொபைல் சார்ஜ் தான் அவசரத் தொடர்புக்கு உதவும். அதை இப்போதே ‘புல் சார்ஜ்’ (Full Charge) செய்து வைத்துக்கொள்ளுங்கள். - உணவு மற்றும் தண்ணீர்: சாலைகளில் நீர் தேங்கினால் கடைகள் திறக்காது. ஸ்விக்கி, ஜோமேட்டோவும் (Swiggy/Zomato) வேலை செய்யாது.
• குடிநீர்: அடுத்த 2 நாட்களுக்குத் தேவையான வாட்டர் கேன்களை ஸ்டாக் வையுங்கள்.
• உணவு: சமைக்கத் தேவையில்லாத பிரட் (Bread), பிஸ்கட், ரஸ்க், அவல், பொரி, நிலக்கடலை போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
• பால்: குழந்தைகள் இருந்தால், பால் பவுடர் (Milk Powder) கைவசம் இருப்பது மிக அவசியம். - மருந்துகள் (First Aid & Medicines): வெளியே செல்ல முடியாத சூழல் வரலாம். அதனால், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான பிபி, சுகர் மாத்திரைகள் மற்றும் அவசரத் தேவைக்கான காய்ச்சல், தலைவலி மருந்துகள் (Paracetamol) தேவையான அளவு இருக்கிறதா எனப் பாருங்கள்.
- ரொக்கப் பணம் (Cash in Hand): மின்சாரம் மற்றும் இன்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டால், கூகுள் பே (GPay), பேடிஎம் (Paytm) வேலை செய்யாது. ஏடிஎம்மிலும் பணம் இருக்காது. கையில் போதுமான அளவு சில்லறை மற்றும் ரொக்கப் பணத்தை (Cash) எடுத்து வைப்பதே பாதுகாப்பு.
- வீட்டுப் பாதுகாப்பு:
• எலக்ட்ரானிக்ஸ்: இடி, மின்னல் சமயத்தில் டிவி, ஃப்ரிட்ஜ், மிக்ஸி போன்ற விலை உயர்ந்த பொருட்களின் பிளக்குகளை (Plugs) கழற்றி விடுங்கள்.
• மொட்டை மாடி: காற்றில் பறக்கக்கூடிய பிளாஸ்டிக் சேர்கள், டப்பாக்கள், பூந்தொட்டிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது வீட்டிற்குள் மாற்றுங்கள்.
முக்கிய குறிப்பு:
• மழை நின்றாலும், தேங்கியிருக்கும் நீரில் இறங்க வேண்டாம் (மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்).
• வதந்திகளை நம்பாதீர்கள். அதிகாரப்பூர்வமான வானிலை அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள்.
“வரும் முன் காப்பதே சிறந்தது!” பாதுகாப்பா இருங்க மக்களே!
