வங்க கடலில் உருவெடுத்துள்ள டிட்வா புயலால் ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனையடுத்து ராமேஸ்வரத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது டிட்வா புயல். தற்போது மணிக்கு 10 முதல் 13 கி.மீ. வேகத்தில் வட தமிழ்நாட்டை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது.
இப்புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் அனைத்து ரயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன. மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனிடையே நாகை மாவட்டத்தில் இருந்து 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 20 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரிடர் மீட்பு குழுக்கள்
மேலும் டிட்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
