கார் விபத்தை மத மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Madurai Adheenam
பாரம்பரிய மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரிஹர ஞானசம்பந்தர் தேசிக்காச்சாரியார் பதவி ஏற்றார். இவர் பதவியேற்றது முதல் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த சூழலில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் கடந்த மே இரண்டாம் தேதி சொகுசு காரில் சென்றபோது மற்றொரு கார் மோதி சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை ஆதீனம், குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அவரது ஓட்டுநரும் அது குறித்து பேட்டி அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு மதுரை ஆதீனம் தவறான தகவல்களை வெளியிடுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மத ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பல இடங்களில் ஆதீனத்திற்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி சென்னை காவல் நிலைய ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆதீனத்திற்கு எதிராக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கார் விபத்து விவகாரத்தில் மத ரீதியான மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள ஆதீனம் மடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது மடத்திற்குள் ஆதீனத்தை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக விசாரணை நடத்த வந்த போலீசாரை நுழைய விடாமல் பாஜகவினர் மறுத்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
