வைஃபை ஆன் செய்ததும், ’இன்னும் எத்தனை எத்தனைதான் காத்திருக்கோ ராசா..’ என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்..
என்னய்யா எந்த கட்சி விவகாரத்தை சொல்லப் போறீரு?
டிசம்பர் 10ஆம் தேதி நடக்கப் போகும் அதிமுக பொதுக்குழுவை பத்திதான்.. இந்த பொதுக்குழுவை பாஜக, ஓபிஎஸ் டீம் மட்டுமல்ல.. அதிமுகவுல இருக்கிற சீனியர்களும் கூட ரொம்ப உன்னிப்பாக கவனிக்கிறாங்க..
என்னய்யா.. சொல்றதைப் பார்த்தா.. அதிமுகவில் இன்னொரு கலகமா?
அப்படித்தான் போல.. அதிமுகவுல இப்ப புயல் மையம் கொள்ள தொடங்கிருச்சுன்னு சொல்லலாம்.. இதை பற்றி அதிமுக மூத்த தலைவர்களிடம் பேசுனப்ப, “ஓபிஎஸ் சசிகலா டிடிவின்னு வெளியேற்றுனவங்களை மீண்டும் சேர்க்கனும்னு செங்கோட்டையன் சொல்லிப் பார்த்தாரு.. கெடு விதிச்சாரு.. ஒன்னும் நடக்கலை.. அவரு விஜய்கிட்ட போய் சேர்ந்துட்டாரு..
அதனால பிரச்சனை முடிஞ்சதுன்னு இல்லை.. அம்மா நினைவுநாளான டிசம்பர் 6-ந் தேதி பொதுச்செயலாளருடன் சிவி சண்முகம், தங்கமணி எல்லாம் வரலை..
சிவி சண்முகம் தனியா, வன்னியர் பெல்ட் நிர்வாகிகளுடன் வந்து மரியாதை செலுத்துனார்.. சிவி சண்முகமும் செங்கோட்டையனைப் போலவே, கட்சியில இருந்து வெளியேற்றுனவங்களை மீண்டும் சேர்த்தாதான் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறாரு.. இதை எத்தனையோ முறை பொதுச்செயலாளர்கிட்ட சொல்லி பார்த்தாரு.. ஆனால் இந்த பிரச்சனையை பேசாம தள்ளி போட்டுகிட்டே இருந்தாரு பொதுச்செயலாளர்..
இப்ப டிசம்பர் 6-ந் தேதி அம்மா நினைவுநாளுக்கு வாங்கன்னு வேலுமணிதான் சிவி சண்முகத்தை கூப்பிட்டாரு.. அதுக்கு கூட சலிப்பா பதில் கொடுத்திருக்காரு சிவி சண்முகம்.. அதனால அவரு தனியா தன்னோட ஆதரவாளர்களுடன் அம்மா நினைவிடத்துக்கு போனாரு..
அதே மாதிரிதான் தங்கமணியும் பொதுச்செயலாளர் மீது ரொம்ப அதிருப்தியா இருக்காரு.. அதனாலதான் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டும் படாமலும் இருக்கிறாரு.. தங்கமணியை பத்தியும் மீடியாவுல நிறைய ரூமர்ஸ் வந்துகிட்டே இருக்கு..
சிவி சண்முகம், தங்கமணி மாதிரி சீனியர்கள், டிசம்பர் 10 பொதுக்குழுவுல சில விஷயங்களை பகிரங்கமாக பேசுவாங்கன்னு சொல்றாங்க..
ஆனா பொதுச்செயலாளரோ, எந்த சூழ்நிலையிலும் வெளியேற்றுனவங்களை மீண்டும் சேர்க்குறதே இல்லைங்கிறதுல திட்டவட்டமாகவே இருக்காரு. ஆக மொத்தம் டிசம்பர் 10 பொதுக்குழுவுல ஏதோ நடக்கப் போகுதுன்னு மட்டும் எங்களுக்கு நல்லாவே தெரியுது” என்கின்றனர்.
அதிமுக பொதுக்குழுவுல பாஜக தலையீடு இல்லையா?
அது எப்படிய்யா இல்லாம இருக்கும்.. டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்திச்சு பேசுன ஓபிஎஸ், தன்னோட சகாக்கள்கிட்ட சில விஷயங்களை ஷேர் செஞ்சிருக்காரு.. அதாவது, ‘ அமித்ஷாவுக்கு இங்க நடக்குற ஒவ்வொன்னும் துல்லியமா தெரியுது.. டிடிவி தினகரனை தூண்டி விடுறதே அண்ணாமலைங்கிற வரைக்கும் டெல்லிக்கு தெரிஞ்சிருக்கு.. அதனாலேயே அண்ணாமலையை கூப்பிட்டு ரிவிட் அடிச்சிருக்காங்கன்னா பார்த்துக்குங்க..
அதே மாதிரிதான் தமிழ்நாட்டுல அதிமுக ஒன்னா இல்லாம போனா திமுகதான் ஜெயிக்கும்; பாஜக கூட்டணி ஜெயிக்காதுன்னு அமித்ஷாவுக்கு நல்லாவே தெரியுது..
அதனாலதான் எடப்பாடியை கூப்பிட்டு பொதுக்குழுவுல நல்ல முடிவு எடுக்கன்னும் சொல்லி இருக்காரு.. நம்மகிட்டயும் புதுகட்சி எல்லாம் தொடங்காதீங்க.. அமைதியா இருங்க.. நல்லதுதான் நடக்கும்னு சொன்னாரு அமித்ஷா.. டிசம்பர் 10-ந் தேதி பொதுக்குழுவுல என்னதான் முடிவு எடுக்கறாங்கன்னு நாமும் வெயிட் பண்ணுவோம்..
அதுக்கு அப்புறம் பாஜக மேலிடம் “ஆக்ஷனில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை”ன்னு ஓபிஎஸ் சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
