2024 ஆடி மாத (17.7.24- 16.8.24)நட்சத்திரப் பலன்கள்! அஸ்வினி முதல் ஆயில்யம் வரை!

ஜோதிடம்

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

1. அஸ்வினி
நன்மைகள் அதிகரிக்கக் கூடிய மாதம்.. அலுவலகத்தில் சுமுகமான சூழல் நிலவும். உயரதிகாரிகள் ஆதரவினால், எதிர்பார்த்த ஏற்றங்கள் வரும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டு. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும்.

சுபகாரியத் தடைகள் விலகும். பூர்வீக சொத்துகள் சேரும். பெண்களுக்கு யோகமான காலகட்டமிது. செய்யும் தொழிலில் உயர்வுகள் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் சிறக்கும். அரசுப் பணிபுரிவோர் அமைதியாகச் செயல்படுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

அரசியலில் இருப்போருக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும். எழுத்தாளர்கள், கலைத்துறையினர், சினிமா, படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். சோம்பலில்லா மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் அதிகரிக்கும். பயணங்களில் வேகம் வேண்டாம். வயிறு, முதுகு, கண் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு.

கணபதி வழிபாடு களிப்பு தரும்..

2. பரணி
முயற்சிகள் முழுமையாகப் பலன் தரும் மாதம். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் நிச்சயம் கைகூடிவரும்.  சக ஊழியர்களின் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். எந்தப் பொறுப்பையும் தட்டிக்கழிக்காமல் ஏற்றுச்செய்யுங்கள்.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். குழந்தைகளின் செயல்கள் பெருமை சேர்க்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடிவரும். இளம்வயதினரின் காதல் பெற்றோரால் ஏற்கப்படும்.

அசையும் அசையா சொத்து சேரும். எந்தத் தொழில் செய்கிறீர்களோ அதில் முழுமையான கவனம் செலுத்துங்கள். வர்த்தகக் கடன்கள் சுலபமாக அடைபடும். ஒப்பந்தங்களில் கவனம்தேவை. மங்கையர்க்கு மங்களங்கள் சேரக்கூடிய ஆண்டு.

அரசியல் சார்ந்தவர்கள், பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அரசுப் பணிபுரிவோர், கையெழுத்துப் போடும்போது கவனமாக இருங்கள். எழுத்தாளர்கள், சினிமா, கலைத்துறை, பத்திரிகைத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நன்மைதரும்.

வாகனத்தில் நிதானம் முக்கியம்.. ரத்த அழுத்த மாற்றம், நரம்பு, எலும்பு பிரச்னைகள் வரவாய்ப்பு உண்டு.

நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

3. கிருத்திகை
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் மாதம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். எதையும் நேரடி கவனத்துடன் செய்தால் உயர்வுகள் நிச்சயம் உண்டு. பிறரின் குறுக்குவழி யோசனை எதையும் ஏற்க வேண்டாம்.

வீட்டில் விட்டுக் கொடுத்தல் முக்கியம். எதிர்பால் நட்பில் எல்லை மீற வேண்டாம். வாரிசுகளால் பெருமை சேரும். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். பழைய கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். தொழிலில் லாபம் சீராகும் தெரியாத தொழிலில் முதலீட்டை முடக்க வேண்டாம். அரசுப் பணியினருக்கு மேன்மைகள் உருவாகும்.

அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்தைக் கையாள்வது அவசியம். யாருக்கும் ஜாமீன் தரவேண்டாம். கலைஞர்கள், சினிமா, அரசியல், படைப்புத் துறையினர் வாய்ப்புகள் தேடி வரும்போது வீண் கர்வம் கொள்ளவேண்டாம். பெண்களுக்கு உறவுகளிடையே செல்வாக்கு உயரும். மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். பயணத்தில் கொண்டு செல்லும் பொருட்கள் பத்திரம்.

அடிவயிறு, கழிவு உறுப்பு, அஜீரண சங்கடங்கள் வரலாம்.

அம்மன் வழிபாடு ஆனந்தம் தரும்

4. ரோகிணி
நிதானமாகச் செயல்படவேண்டிய மாதம். அலுவலகத்தில் அலட்சியம், அவசரம் கூடாது. பணத்தைக் கையாள்வதில் நிதானம் தேவை. யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம்.பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், எல்லா உயர்வுகளும் படிப்படியாக வந்து சேரும்.

வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். தம்பதியரிடையே மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். விசேஷங்கள் தொடர்ச்சியாக வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு.

பெண்கள், சமையல் அறையில் கவனமா இருங்கள்.. தொழிலில் சோம்பல் தவிர்த்தால், செழிப்பு ஏற்படும். கூட்டுத் தொழிலில் சந்தேகம் கூடாது அரசியல் துறையில் இருப்போர் நிதானத்தைக் கையாள்வது அவசியம். யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். அரசாங்கத் துறையில் உள்ளோர், புறம்பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

கலை,சினிமா, எழுத்து,நாடகம், இசைத்துறையில் உள்ளோருக்குஏற்றமான சூழல் உருவாகும். படிக்கும் மாணவர்கள் சகவாசத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர்ப் பயணத்தைப் பகலில் மேற்கொள்வதே நல்லது.

கீழ்முதுகு, அடிவயிறு, பாதம், மூட்டு உபாதைகள் வரலாம்.

மாருதி வழிபாடு மகிழ்வு தரும்.

5. மிருகசீரிஷம்
பொறுமையாகச் செயல்பட்டுப் பெருமை பெறவேண்டிய மாதம். அலுவலகத்தில் படபடப்பும், பரபரப்பும் வேண்டாம். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காதீர்கள். பணிசார்ந்த ரகசியங்களை யாரிடமும் பகிரவேண்டாம். கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் சுமுகமான சூழல்நிலவும். வெளியிடத்துக் கோபத்தை வீட்டுக்கு சுமந்து செல்ல வேண்டாம். வரவுடன் செலவும் சேர்ந்தே வரும். அநாவசிய கேளிக்கை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு உறவினர் சேர்க்கையால் நன்மைகள் உண்டாகும்.

தொழிலில் உழைப்புக்குத் தக்கவகையில் வளர்ச்சி உருவாகும். பெரிய முதலீடுகளை குடும்பத்தினர் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்..அரசியல் துறையினர், உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.

அரசுப்பணியில்பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனமாக இருங்கள். கலைஞர்கள், சினிமா, படைப்பாளிகள் சிற்றின்பம் தவிர்த்தால்,சீக்கிரம் முன்னேறலாம். மாணவர்கள், களியாட்டங்களில் கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பது நல்லது. பயணத்தில் வேகம்கூடவே கூடாது.

ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகளை உடனே கவனியுங்கள். அஜீரணம், தூக்கமின்மை வரலாம்.

பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

6. திருவாதிரை

உழைப்பினால் உயர்வுகாண வேண்டிய மாதம்.. அலுவலகத்தில் திட்டமிட்டு உழைத்தால், ஆதரவான சூழல் உருவாகும். பதவி, பாராட்டுகள், மனம்போல கிட்டும். மேன்மைகள் வரும் சமயத்தில், உங்கள் செயல்களும் மேலானதாக இருந்தால் எதிர்காலத்திலும் ஏற்றம் தொடரும்.

வீட்டில் விசேஷங்கள் வர ஆரம்பிக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சி நிறையும். சுபகாரியத் தடைகள் விலகும். வரவு சீராக இருக்கும். வீடு, வாகனங்கள் மாற்ற புதுப்பிக்க நேரம் வரும்.

தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாக ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும்., அரசியலில் உள்ளவர்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும்.

அரசுப்பணி புரிகின்றவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்றம் ஏற்படும்.பொறுப்பை நேரடியாக கவனிப்பது அவசியம். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். கலை,எழுத்து,சினிமா படைப்புத் துறையில் உள்ளவர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும் சிலருக்கு அரசுவழி பாராட்டும் பரிசும் கிட்டலாம்.

மாணவர்கள் மறதி தவிர்த்தால் மதிப்பெண் உயரும். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர்செய்வது அவசியம். ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னைகள் வரலாம்.

சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

7.புனர்பூசம்

பணிவும், திட்டமிடலும் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கும் மாதம். பொறுப்புடன் செயல்பட்டால். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். உயரதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், செல்வாக்கு அதிகரிக்கும்.

வாரிசுகளால் சந்தோஷம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் தேவை. சுபகாரியங்களில் நிதானம் முக்கியம்.பெண்களுக்கு ஆதரவான சூழல் நிலவும். செய்யும் தொழில் எதுவானாலும் முயற்சிக்கேற்ப வளர்ச்சி ஏற்படத்தொடங்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். கூட்டுத் தொழிலில் சந்தேகம் வேண்டாம்.

அரசியலில் இருப்போர்க்கு ஆதாயம் உண்டாகும். புறம் சொல்லும் நட்புகளை விலக்குவது முக்கியம். அரசுப்பணிபுரிவோர்க்கு ஏற்றம் ஏற்படும். புதிய நட்புகளிடம் கவனமாக இருங்கள்.

கலைஞர்கள், படைப்பாளிகள், சினிமாத் துறையினருக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். மாணவர்கள் அனுதினம் படிப்பது அனுகூலம் தரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அஜீரணம், ஒவ்வாமை,ஒற்றைத்தலைவலி, பித்த அதிகரிப்பு உபாதைகள் வரலாம்.

சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் தரும்.

8.பூசம்

சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய மாதம். அலுவலகத்தில் எந்தப் பொறுப்பையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களுடன் சச்சரவு தவிருங்கள். பதவி, இடமாற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும். அதற்கு உங்கள் செயல்களே காரணமாக அமையும். அனுபவஸ்தர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள்.

வீட்டில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடம் வீண் மனக்கசப்பு வேண்டாம். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்.பூர்வீக சொத்தில் இழுபறி நிலை மாறும்.

பெண்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டு.தொழில் எதுவானாலும் அதில் முழு முயற்சி முக்கியம். ஒப்பந்தப் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

அரசியலில் இருப்போர், நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். ஆண்,பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். அரசுப்பணி செய்பவர்கள் எதிலும் திட்டமிடுவது முக்கியம். பிறரை நம்பி தெரியாத விஷயத்தில் இறங்க வேண்டாம்.

கலைஞர்கள்,படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,சினிமா துறையினருக்கு ஏற்றம் உண்டு. மாணவர்கள், சோம்பலை விரட்டுவது முக்கியம். மன அழுத்தம், தூக்கமின்மை, அடிவயிறு உபாதைகள் வரலாம். பயணத்தில் நிதானம் முக்கியம்.

இஷ்ட மகான் வழிபாடு ஏற்றம் தரும்..

9. ஆயில்யம்

நிதானமாகச் செயல்பட்டால் நிம்மதி நிலைக்கும் மாதம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வு வரும். உயரதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் வேண்டாம். உடனிருப்போர் விஷயத்தில் உங்கள் தலையீடு கூடாது. இடமாற்றம் தாமதமானாலும் உங்கள் இஷ்டம்போல் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.

இல்லத்தில் சீரான போக்கு நிலவும். வரவை சேமிக்கப்பழகுவது நல்லது. உறவுகளை உதாசீனப்படுத்துவது கூடாது. வாரிசுகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது. அசையும் அசையா சொத்து சேரும்.

பெண்களுக்கு அடக்கம் இருந்தால், அனைத்தும் ஜெயமாகும். எந்தத் தொழிலிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். வீண் கடன்களைத் தவிருங்கள். அரசியல் துறையில் உள்ளோர், அமைதியாய் இருந்தால் அனைத்தும் கைகூடும். மேலிடத்திடம் கனவிலும் உரசல் வேண்டாம்.

அரசுப்பணி செய்வோர், கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். பணத்தைக் கையாளும் பணியில் கவனச் சிதறல் கூடாது.

கலை, படைப்பு, சினிமா, இசைத் துறையினருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. செல்லும் இடத்தின் சட்டங்களை மீறாமல் இருப்பது முக்கியம். வாகனத்தில் பழுது இருப்பின் உடனே சரி செய்யுங்கள். கழுத்து, முதுகுத் தண்டுவடம், கழிவு உறுப்பு பிரச்னைகள் வரலாம்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

(அடுத்தடுத்த நட்சத்திரப் பலன்கள் தொடரும்) 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

காதில்- ஒரு பார்வை

30 வயது பெண்ணாக இனி நடிக்கமாட்டேன்: நடிகை தபு

 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *