2024 ஆடி மாத (17.7.24- 16.8.2024) நட்சத்திரப் பலன்கள்! மகம் முதல் கேட்டை வரை!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

 

10.மகம்

அமைதியாகச் செயல்பட்டால், அனுகூலம் அதிகரிக்கும் மாதம். அலுவலகத்தில் கவனமாக உழைத்தால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் நிச்சயம் கிடைக்கும். வெளியூர்,வெளிநாடு செல்லும் வாய்ப்பு தடைபட்டாலும்  அது நன்மைக்கே. . அனுபவஸ்தர்களிடம் சச்சரவு வேண்டாம்.பொறுப்புகளில் சலிப்பு கூடாது.

வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். உறவுகளுடன் அன்யோன்யம் ஏற்படும். இளம் வயதினரின் காதல் கனவு ஈடேறும்.

அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகள் வாழ்வில் சுபிட்சம் வரும் பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு..தொழில் எது செய்தாலும் சோம்பல் தவிர்த்து உழைப்பது உன்னதம் தரும். புதிய ஒப்பந்தங்களில் அவசரம் கூடாது.அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டப்புறம்பிற்கு இடம்தர வேண்டாம்.

அரசியலில் இருப்பவர்கள் மேலிடத்தின் ஆதரவில் மேன்மை பெறலாம். பொது இடங்களில் வாக்குத் தரவேண்டாம். அரசுப்பணியில் இருப்போர்க்கு உன்னத உயர்வுகள் வரும். எந்த சமயத்திலும் அவசரம் அலட்சியம் தவிருங்கள்.

சினிமா, கலை, படைப்பு, இசைத்துறையில் இருப்போருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். இரவில் வெளி இடங்களில் நிதானமாக இருங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள், சுவாசப் பிரச்னைகள் வரலாம்.

துர்க்கை வழிபாடு செழிப்பு சேர்க்கும்.

 

11.பூரம்

அடக்கமாகச் செயல்படுவோர்க்கு அநேக நன்மைகள் கிட்டக்கூடிய மாதம். அலுவலகத்தில் எந்த சமயத்திலும் அலட்சியம் கூடாது. புறம்பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். எதிர்பாரா இடமாற்றம் வந்தால்,தவிர்க்க வேண்டாம். பொறுப்புகள் எதையும் திட்டமிட்டுச் செய்ய்யுங்கள்.  ஊதிய உயர்வு தாமதமானாலும் நிச்சயம் கிட்டும்.

இல்லத்தில் சுபிட்சம் இடம்பிடிக்கும். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். வாரிசுகளால் பெருமை சேரும். பெற்றோர் பெரியோர் உடல்நலத்தில் கவனம் தேவை. யாரிடமும் குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வரவை சேமிக்கப்பழகுங்கள். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். இளம் வயதினர் காதலில் அவசரம் வேண்டாம்.

தொழில் எதிலும் கவனமாக இருப்பது கணிசமான நன்மை தரும். கனரக வர்த்தகத்தில் அவசரம் கூடாது. கூட்டுத் தொழிலை நேரடியாக கவனியுங்கள்.அரசியலில் இருப்போருக்கு ஆதரவு நிலைக்கும். அதேசமயம்,யாருக்கும் ஜாமீன், ஜவாப், உத்தரவாதம் தருவதைத் தவிருங்கள்.

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். சின்சியராக உழைப்பது, எதிர்காலத்தையும் ஏற்றம் ஆக்கும்.சினிமா, இசை,கலை,படைப்புத் துறையினர், உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறலாம்.

மாணவர்கள் தினம்தினம் படிப்பது அவசியம். இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கழிவு உறுப்பு, முதுகு, கழுத்து, தோள்பட்டை, நரம்பு உபாதைகள் வரலாம்.

ஏழுமலையான் வழிபாடு ஏற்றம் தரும்.

 

  1. உத்தரம்

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் மாதம். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் உருவாகும். தகுதிக்கு உரிய பெருமைகள் நிச்சயம் வந்து சேரும். தற்பெருமை தவிர்த்து செயல்பட்டால் நன்மைகள் நிலைக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கை நழுவலாம். உழைப்பில் சோம்பல் ஒருபோதும் கூடாது.

வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். குழந்தைகள் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும். பழைய கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். சகோதர உறவுகளிடம் வீண் சண்டை வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.  பெண்களுக்கு நாவடக்கம் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கும்.

செய்யும் வர்த்தகத்தில் செழிப்பான சூழல் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதியில் நேரடி கவனம் முக்கியம்.அரசியலில் இருப்போர் அகலக்கால் வைக்கவேண்டாம். முகஸ்துதி நபர்களை விலக்குங்கள்.

அரசுப்பணி செய்வோர், பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும். கலைஞர்கள், சினிமாத் துறையினர் முயற்சிகளில் தளராமல் இருப்பது முக்கியம். வீண் ஜம்பம் ஒருபோதும் வேண்டாம்.

மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் படிப்பது நல்லது,

தலைவலி, ரத்த அழுத்த மாற்றம்,எலும்புத் தேய்மானம், தோள்பட்டை, மூட்டு வலி வரலாம்.

குரு வழிபாடு கோடி நன்மை தரும்.

 

  1. ஹஸ்தம்

எண்ணங்கள் ஈடேறக்கூடிய மாதம். அதேசமயம் எதிலும் நேரடி கவனம் முக்கியம். அலுவலகத்தில் ஏற்றங்கள் தொடர்ச்சியாகும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைத் தள்ள வேண்டாம்.  சிலருக்கு பணிசார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். பொறுப்புகளைத் தவிர்க்காமல் ஏற்பது உயர்வுக்கு உத்தரவாதமாகும்.

வீட்டில் சுமுகச் சூழல் நிலவும். அது நிலைக்க, விட்டுக்கொடுத்தல் முக்கியம். யாருடைய தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். குலதெய்வ வழிபாட்டை அவசியம் ஈடேற்றுங்கள். வாழ்க்கைத் துணையால் பெருமை உண்டு. சொத்துகளில் வீண் தர்க்கம் வேண்டாம். பெண்களுக்கு யோகத்தின் அளவு அதிகரிக்கும்.

செய்யும் தொழிலில் வளர்ச்சிவிகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகம் சீரான வளர்ச்சிபெறும். சட்டப் புறம்பினை கனவிலும் நினைக்க வேண்டாம்.

அரசுப்பணியில் உள்ளவர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. அலுவலகக் கோப்புகளில் அவசரம் வேண்டாம். அரசியலில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலிடத்தின் ஆதரவு அதிகரிக்கும்.

சினிமா, கலை, படைப்புத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரத்தொடங்கும். எந்த சமயத்திலும் நிதானம் தவற வேண்டாம்.

மாணவர்கள் திறமைக்கு உரிய மதிப்பினைப் பெறலாம்.

நரம்பு, பரம்பரை உபாதைகள், கண்கள், முதுகு, நெஞ்செரிச்சல் உபாதைகள் வரலாம்.

பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.

14. சித்திரை

நிதானமாகச் செயல்பட்டால், நிச்சயம் வெற்றிகிட்டும் மாதம். அலுவலகத்தில் உங்கள் பொறுப்பு உயரும். பொறுப்பு உணர்வுடன் நேரம் தவறாமல் செயல்பட்டால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். அப்படிச் செல்லும்போது கொண்டு செல்லும் கோப்புகள் பத்திரம்.

இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வேண்டாத கடன்களைத் தவிருங்கள். யாருடைய தலையீட்டையும் அனுமதிக்க வேண்டாம். வாரிசுகளால் நிச்சயம் பெருமை வரும். பெண்கள் கர்ப்ப காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொழில் எதைச் செய்தாலும் அதில் முழு கவனம் முக்கியம். உங்களிடம் பணிபுரிவோரிடம் வீண் கடுமை வேண்டாம். பங்குவர்த்தகத்தில் நிதானம் அவசியம்.

அரசுப்பணி புரியக்கூடியவர்கள் நிச்சயம் ஏற்றம்காண்பீர்கள். யாருக்கும் வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். அரசியலில் இருப்பவர்கள் பொது இடங்களி பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். பிறர் பேச்சைக் கேட்டு, உடனிருப்போரை உதாசீனப்படுத்த வேண்டாம்.

சினிமா, கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். நம்பிக்கை துரோகிகளை அடையாளம் கண்டு விலக்குங்கள். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள்.

அடிவயிறு, கழிவு உறுப்பு, தோல் நிறமாற்றம், ரத்த நாள உபாதைகள் வரலாம்.

ராகவேந்திரர் வழிபாடு ரம்யமாக்கும்.

 

15. சுவாதி

முயற்சிகளால் முன்னேற வேண்டிய மாதம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு உண்டு. உடனிருப்போரிடம் உரசல் வேண்டாம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். அயல்நாட்டுப் பயணவாய்ப்பு தள்ளிப்போகலாம், ஆனால் அது நன்மையாகவே இருக்கும்.

இல்லத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். குலதெய்வ வழிபாட்டிற்கு நேரம் அமையும். குழந்தைகளால் பெருமை சேரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். பழைய கடன்களை முழுமையாகப் பைசல் செய்யுங்கள். பெண்கள் ஹார்மோன் உபாதையில் அலட்சியம் வேண்டாம்.

தொழிலாக எதைச் செய்தாலும் அதில் தளரா முயற்சிகள் முக்கியம். சட்டப்புறம்பான எதற்கும் வர்த்தகத்தில் இடம்தர வேண்டாம். கடன் அட்டைகளை பத்திரமாக வைத்திருங்கள்.

அரசியலில் இருப்பவர்கள் தலைகனத்தைத் தவிர்ப்பது முக்கியம். பொது இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வீண் வாக்குறுதிகள் வேண்டாம்.

அரசுப்பணி செய்பவர்கள் உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. பணியிட ரகசியங்களை யாரிடமும் பகிராதீர்கள். கலைத்துறை, சினிமா, படைப்புத்துறை, இசைக்கலைஞர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் வரும்.

மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

பூச்சிக்கடி, நரம்பு, எலும்புதேய்மானம், பல், மூட்டு உபாதைகள் வரலாம்:

மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் சேர்க்கும்.

 

16.விசாகம்

திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் மாதம். பணியிடத்தில்  பதவி, பாராட்டுகள் நிச்சயம் வரும். உயரதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி சார்ந்த பயணங்களில் உடன் வரும் யாரிடமும் ரகசியம் பகிரவேண்டாம். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம்.

இல்லத்தில் சுமுகமான சூழல் நிலவும். உறவுகளால் நன்மைகள் சேரும். விலகி இருந்த உறவும் நட்பும் மீண்டும் வரும்.வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் நடக்கும். தரல் பெறல் எதையும் உடனுக்குடன் குறித்துவையுங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.

தொழில் எதுவானாலும் தொய்வு இல்லாத முயற்சிகள் முக்கியம். ஏற்றுமதி இறக்குமதியில் நேரடி கவனம் அவசியம்.

அரசியல் துறையில் உள்ளவர்கள், பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். அரசுப்பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த மேன்மைகள் கூடிவரும். உடனிருப்போர் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

சினிமா, கலைத்துறை, இசைத்துறையினர் உழைப்புக்கு ஏற்ற உயர்வைப் பெறுவீர்கள். திட்டமிடல் மேன்மை தரும்.

மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம்.

வாகனத்தில் கவனச்சிதறல் கூடாது. கழிவு உறுப்புகள், ரத்த நாளம், நரம்பு, அலர்ஜி, அல்சர் உபாதைகள் வரலாம்.

பார்வதி வழிபாடு பசுமையாக்கும்.

 

17.அனுஷம்

சோம்பல் தவிர்த்தால் ஏற்றம் ஏற்படும் மாதம்.  அலுவலகத்தில் நேரம் தவறாமல் செயல்பட்டால்,  உங்கள் திறமை பேசப்படும். யாரிடமும் வீண் தர்க்கமும் வேண்டாத வாதமும் கூடாது. பதவி,இடம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. செல்லும் நாட்டின் சட்டதிட்டங்களை முழுமையாக மதியுங்கள்.

இல்லத்தில் இனிய சம்பவங்கள் நிகழும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். வீடு, வாகனம் பொருட்சேர்க்கை ஏற்படும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு.பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் யோகம் உண்டு.

செய்யும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் உழைப்பில் தொய்வு இல்லாதவரை உயர்வுகள் தொடரும். புதிய ஒப்பந்தங்களில் அவசரம் வேண்டாம்.

அரசியலில் இருப்போர்க்கு திடீர் பதவி பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. புறம்பேசுவோரை உடன் சேர்க்க வேண்டாம். அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் ஏற்றத்தைக் காண்பீர்கள். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு வரும்.

கலைஞர்கள், நடிப்புத்துறையினர்,இசைக்கலைஞர்கள் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு மனம்போல மதிப்பு உயரும்.

தலைவலி, அஜீரணம், கழுத்து, கால், தோள்பட்டை வலி வரலாம்.

இரவுப் பயணம் தவிருங்கள்.

பெருமாள், தாயார் வழிபாடு பெருமை தரும்.

 

18.கேட்டை

சலிக்காமல் உழைத்தால், சகலமும் நன்மையாகும் மாதம். அலுவலகத்தில் சாதகமான சூழல் உருவாகும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் இருப்போர் யாரிடமும் கடுமைகாட்ட வேண்டாம். பொறுப்புகளை திட்டமிட்டுச் செய்யுங்கள். இடமாற்றம் வரலாம். அது நன்மையே தரும்.

வீட்டில் விசேஷங்கள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். குலதெய்வத்தைக் கும்பிட்டால், குழந்தை பாக்யம் கிட்டும். பழைய கடன்கள் சுலபமாக அடைபடும். வேண்டாத ஆடம்பரம் தவிருங்கள். பெண்களுக்கு சீரான நன்மைகள் கிட்டும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

தொழிலமைப்பில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கையெழுத்திடும் போது நிதானம் முக்கியம்.

அரசியலில் உள்ளோர் சகவாச தோஷங்களை விலக்குங்கள். யாருக்கும் ஜவாப்,ஜாமீன் தரவேண்டாம்.

அரசுத்துறையில் பணிபுரிவோர், எதிர்பார்த்த மேன்மைகள் வரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

கலைஞர்கள், சினிமாத்துறையினர், படைப்பாளிகளுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். எந்த சமயத்திலும் வீண் உணர்ச்சிவசப்படல் கூடாது.

மாணவர்கள், படிக்கும் காலத்திலேயே பணிக்கான வாய்ப்பு கிட்டும்.

வாகனத்தில் சிறுபழுதையும் உடன் சீர் செய்யுங்கள். முகம், முதுகுத் தண்டுவடம், அடிவயிறு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம்.

மாருதியை வணங்குவது மகிழ்ச்சி சேர்க்கும்.

(அடுத்த நட்சத்திரப் பலன்கள் தொடரும்)

2024 ஆடி மாத (17.7.24- 16.8.24)நட்சத்திரப் பலன்கள்! அஸ்வினி முதல் ஆயில்யம் வரை!

கடலூர் மூவர் கொலை: “அம்மா தற்கொலைக்கு பழிவாங்கினேன்” – குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள்: அமைச்சர் சாமிநாதன் உத்தரவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts