Update- மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Published On:

| By Balaji

இப்போது…

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 82 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 92 ஆயிரம் கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சாகர் மாலா திட்டத்துக்கு ரூ. 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடற்கரை நகரங்கள் மேம்பாட்டுக்கான திட்டமாகும்.

நாட்டில் நீர்வளத்தை மேம்படுத்த ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டுக்கென ரூ. 87 ஆயிரத்து 765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பருப்பு விலையைக் கட்டுப்படுத்த ரூ. 900 கோடியும், பருப்பு உற்பத்தியைப் பெருக்க ரூ. 500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ரூ. 82 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டைவிட 4.8 சதவிகிதம் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 77 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப். போன்ற துணை ராணுவப் படைகளின் மேம்பாட்டுக்கு இது உதவும். இதில் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட 7 படைகளுக்கு மட்டும் ரூ. 16 ஆயிரத்து 228 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த பட்ஜெட்டில் மத்திய அரசின் மொத்தச் செலவினம் ரூ. 19 லட்சத்து 78 ஆயிரம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1, 713 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தையச் செய்தி

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை!

தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருப்பதாலும், விலைவாசி உயர்ந்துள்ளதாலும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்து பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எந்த வித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. தற்போது இருக்கும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பான ரூ.2.5 லட்சம் மாற்றமின்றி நீடிக்கும். அதே நேரத்தில் வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ரூ.2 ஆயிரமாக இருந்த வருமான வரித் தள்ளுபடி ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

#

தனியார் மயமும் அந்நிய முதலீடும்!

மக்களவையில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், அரசு வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (ஐ.டி.பி.ஐ.) தனியார் மயமாக்கப்படும் என அறிவித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான இந்த வங்கியின் பங்குகளை 50 சதவிகிதத்திற்கும் கீழ் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதே போல் வேளாண் மற்றும் உணவு உற்பத்தித் துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவித்தார். அரசின் இம்முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

#

பட்ஜெட் முதல் செய்தி!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று மக்களவையில் மத்திய பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது பொது பட்ஜெட் இது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய அருண் ஜெட்லி, ‘‘ஜி.எஸ்.டி. எனப்படும் பொது விற்பனை வரியை அமல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு செயல் திட்டங்களுக்காக ரூ.2.31 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அணுமின் சக்தி திட்டத்துக்காக ரூ.3 ஆயிரம் கோடியும், தூய்மை இந்தியா திட்டத்துக்காக ரூ.9 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.97 ஆயிரம் கோடிகள் ஒதுக்கீடு செய்யப்படும். சுமார் 10 ஆயிரம் கி.மீ. அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சுமார் 50 ஆயிரம் கி.மீ. தூரமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாகக் கட்டமைக்கப்படும். 14வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ரூ.2.87 லட்சம் கோடிகள் பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும். ஆதார் எண் கட்டாயமாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். 160 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மே, 1க்குள் கிராமங்களுக்கும் 100 சதவிகிதம் மின்சார வசதி ஏற்படுத்தப்படும். இளம் தொழில் நிறுவனங்களுக்கு நிறுவன லாபத்தில் 100 சதவிகித வரி விலக்கு அளிக்கப்படும். வருமான வரியைப் பொருத்தவரையில் ரூ.60000 வரை வீட்டு வாடகைப்படியில் வரிவிலக்கு அளிக்கப்படும். மேலும், உணவு உற்பத்தி மற்றும் பதனீட்டுத் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். பொது பட்ஜெட் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share