கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. Cuddalore train accident
கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்தில் உள்ள இன்டெர்லாக் சிஸ்டம் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, தனியார் பள்ளி வேன்மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ரயில்வே துறையும், கடலூர் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக விளக்கம் அளித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில்இன்று காலை 7:45 மணிக்கு எதிர்பாராத விபத்து நடந்தது.
நான்கு மாணவர்களுடன் பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த கேட் மூடப்படும் நிலையில் இருந்தது. அப்போது பள்ளிக்கு தாமதம் இல்லாமல் செல்ல வேண்டும் என்று கூறி அந்த கேட்டை திறந்து வழி விடுமாறு வேன் ஓட்டுநர் கூறினார். அதைக் கேட்டு கேட் கீப்பரும் விதிமுறைகளை மீறி தவறுதலாக கேட்டை திறந்துள்ளார்.
விதிப்படி அவர் கேட்டை திறந்திருக்கக்கூடாது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரை இந்த சேவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேட் கீப்பர் மீது எஃப்ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நடந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க முழு நிதியுடன் தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது. ஆனால் ஓராண்டு காலம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
எதிர்பாராத விபத்துக்கு ரயில்வே துறை மன்னிப்பு கோருகிறது. ரயில்வே மருத்துவர்களும் காயமடைந்தவர்களை கண்காணித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே 5லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. cuddalore train accident
கடந்த 2024 ஜூலை முதல் கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில் குமார் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
