கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுரேந்திரகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல் துறை.
அதில் இந்த கொலை வழக்கில் பெண் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது. உண்மையான குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என எஸ்.பி.ராஜாராம் உறுதியாக கூறியதை பதிவு செய்திருந்தோம்.
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான சங்கர் ஆனந்த் என்பவரை கைது செய்த போலீஸ், மேலும் ஷாகுல் அமீது மற்றும் முகமது அலி ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சங்கர் ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தில், “கொலை செய்யப்பட்ட சுரேந்திரகுமார் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர். காராமணிக்குப்பம் ரயில்வே ட்ரேக்கில் விழுந்து எனது அம்மா தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் சுரேந்திரகுமார்தான்.
அதனால் இவரை தீர்த்துக்கட்ட கடந்த ஆறு மாதமாக திட்டமிட்டு வந்தேன். ஜூலை 13 ஆம் தேதி சுரேந்திரகுமார் வீட்டுக்குள் புகுந்து அவரை மட்டும் கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால், அவரது அம்மா கமலேஸ்வரி என்னை தடுக்க முயன்றதால் அவரையும் கொலை செய்தேன். அப்போதுதான் எனது கை விரல் துண்டானது, இருவரையும் கடைசியாக வெட்டி சாய்த்தேன்” என்றார்.
விசாரணை அதிகாரி குறுக்கிட்டு அந்த சிறுவனை கொலை செய்தது ஏன் என்று கேட்டபோது, “சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் அவனையும் கொலை செய்ய நினைத்தேன். வீட்டில் இருந்த தலையணையை சிறுவன் முகத்தில் வைத்து அழுத்தி அதன் பிறகு அவனது கழுத்தை அறுத்தேன்.மூவரையும் கொலை செய்த பிறகு நான் வெளியில் செல்லவில்லை. அதிகாலை 4.30 மணியளவில் தான் வீட்டில் இருந்து வெளியே சென்றேன்.
மறுநாள் ஜூலை 14 ஆம் தேதி நண்பர்களுடன் சென்று பெட்ரோல் ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்தோம். பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தோம். போலீஸ் கண்டுப்பிடிக்காது என நினைத்தோம்” என்றார் கைதான சங்கர் ஆனந்த்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறியபோது, “எஸ்.பி ராஜாராம் சாரின் தீவிரமான முயற்சியாலும் புலன்விசாரணையாலும் தான் விரைவில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தோம்” என்றார்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் பலியான சோகம்!
அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள்: அமைச்சர் சாமிநாதன் உத்தரவு!