ஆந்திரா வரைக்கும் சென்று… கஞ்சா நெட்வொர்க்கை வேரறுத்த தமிழக போலீஸ்! தெலுங்கு சினிமாவை மிஞ்சும் த்ரில் சேசிங்!

Published On:

| By vanangamudi

தமிழகம் முழுதும் கஞ்சா புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீஸ்காரரையே தாக்கிக் கொல்லும் அளவுக்கு கஞ்சா வியாபாரிகள் கட்டுக்கடங்காத வகையில் செல்வாக்கு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். Cuddalore Police bust Ganja

இதற்கு சமீபத்திய உதாரணம் உசிலம்பட்டி போலீஸ்காரர் கொல்லப்பட்ட சம்பவம்.
சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை சீரழிக்கும் இந்த கஞ்சா, நிகழ்காலத்தின் சட்டம் ஒழுங்குக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் அரசியல் வட்டாரங்களிலும் கஞ்சா ஒரு முக்கியமான சப்ஜெக்ட் ஆக மாறிவிட்டது.

இந்த நிலையில்… கஞ்சா சில்லரை விற்பனையாளர்களை மட்டுமே பிடித்து, ‘கணக்கு’ காட்டும் போலீஸாருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தின் அறிவுறுத்தலின் பேரில், வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் போட்ட ஓர் உத்தரவு, இந்த விவகாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதென்ன உத்தரவு?

ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்னின்ன போலீஸ் ஸ்டேஷன்களில் இத்தனை கஞ்சா வழக்குகள் போடப்பட்டது என்று கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தந்த சரக ஐ.ஜி.க்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மூலம் டிஜிபி அலுவலகத்துக்கு இந்த விவரங்கள் செல்லும்.

இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க், தனது எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி.க்களுக்கு வேற லெவல் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

அதாவது, ‘சில்லரை கஞ்சா வியாபாரிகளை பிடித்து வாரா வாரம் கணக்கு காண்பிப்பது. கணக்கு காண்பிப்பதற்காகவே போலீசுக்கு செல்லமான சில கஞ்சா வியாபாரிகளை மெயின்டெய்ன் செய்வது இவற்றையெல்லாம் விட்டுவிட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சில்லரை கஞ்சா வியாபாரிகளுக்கு பின்னால் இருக்கும் செயின் நெட்வொர்க் என்ன? இவர்களுக்கு சப்ளை செய்யும் அவர்கள் யார்? அவர்களுக்கு சப்ளை செய்யும் கஞ்சா நெட்வொர்க்கின் வேர்கள் யார்? என்பதை கண்டறிந்து பூண்டொடு அழிக்க வேண்டும்’ என்பதுதான் ஐ.ஜி.அஸ்ரா கார்க்கின் அதிரடி உத்தரவு.

இந்த உத்தரவை சுமார் ஒரு மாத உழைப்புக்குப் பின் செயல்படுத்திக் காட்டியிருக்கிறது கடலூர் மாவட்டம்.

கடலூர் மாவட்டத்திலுள்ள கஞ்சா விற்பனையாளர்கள் 19 பேர், அவர்களுக்கு சப்ளை செய்த ஆந்திர நெட்வொர்க் என ஒட்டுமொத்தமாக சுற்றி வளைத்து பெரும் பாய்ச்சல் காட்டியிருக்கிறது கடலூர் போலீஸ்.

கடலூர் எஸ்.பி ஆக்‌ஷன்!

இது தொடர்பாக நேற்று (மார்ச் 29) இரவு கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்,

“கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N.ராஜா மேற்பார்வையில் பண்ருட்டி காவல் ஆய்வாளர் வேலுமணி, உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், தங்கவேல் தனிப்படை உதவி ஆய்வாளர் தவச்செல்வம் மற்றும் போலீசார் பண்ருட்டி ரயில்வே ஸ்டேசன் புத்துமாரியம்மன் கோயில் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற

  1. பிரதீப் வயது 26 த/பெ ஈஸ்வரன் ராவ், விசாகப்பட்டினம், ஆந்திரா,
  2. அருண்குமார் வயது 33 த/பெ ஆறுமுகம், புவனகிரி,
  3. புகழேந்தி வயது 26 த/பெ சக்கரபாணி, புவனகிரி,
  4. ஜெயசுமண் வயது 25, த/பெ செந்தில்குமார், பண்ருட்டி,
  5. ஜீவானந்தம் வயது 25 த/பெ முருகன், கடலூர்,
  6. அஜய் (எ) அஜய்குமார் வயது 20 த/பெ வெங்கடேசன், தோப்புக்கொல்லை,
  7. ஜீவா வயது 20 த/பெ கலைச்செல்வன், தோப்புக்கொல்லை,
  8. கிருஷ்ணசெல்வம் வயது 18 த/பெ கிருஷ்ணமூர்த்தி, தோப்புக்கொல்லை,
  9. ஜாக் (எ) சம்பத் வயது 20 த/பெ பாஸ்கர், தோப்புக்கொல்லை,
  10. கிங் (எ) ராஜா வயது 27 த/பெ கிருஷ்ணன், புலவன்குப்பம் ஆகியோர்களை கைது செய்து சுமார் 35 கிலோ கஞ்சா கைப்பற்றினர்” என்று கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார்.

இதுகுறித்து கடலூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சில்லரை கஞ்சா விற்பனையாளர்களை மட்டும் பிடிக்காமல், அவர்களுக்கு சப்ளை செய்கிற மொத்த நெட்வொர்க்கையும் தூக்க வேண்டும் என்ற உத்தரவுப்படி கடலூரில் மார்ச் முதல் வாரத்தில் இந்த ஆபரேஷன் ஆரம்பிக்கப்பட்டது.

கஞ்சா வியாபாரிகளை தூக்கிய தனிப்படை!

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 8 ஆம் தேதி குறிஞ்சிப்பாடி நவீன் என்ற கஞ்சா வியாபாரி சிக்கினார். அவரையடுத்து முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ஒருவரை கைது செய்தோம். இவர்களுடைய சப்ளையர்கள் யார் என்று விசாரித்தபோது, ஆந்திரா வரைக்கும் நீள்வது பொதுவாக தெரியவந்தது. இந்த நிலையில்தான் நன்கு தெலுங்கு மொழி தெரிந்த பண்ருட்டி டி.எஸ்.பி.ராஜாவை கஞ்சா ஆபரேஷனுக்கு மானிட்டரிங் ஆபீசராக நியமித்தார் எஸ்.பி.

இதையடுத்து ராப்பகலாக இந்த வேட்டையில் இறங்கினார் டி.எஸ்.பி.ராஜா. சிக்கிய கஞ்சா வியாபாரி குறிஞ்சிப்பாடி நவீனை விசாரித்தபோது, அவனுக்கு கஞ்சா சப்ளையர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகேயுள்ள மச்சில்லிப்பட்டினத்தில் இருக்கும் அருண், புகழேந்தி ஆகியோர்தான் என்று தெரியவந்தது.

இதையடுத்து ராஜா அமைத்த தனிப்படை ஆந்திரா சென்றது. மச்சிலிப்பட்டினத்துக்கே சென்று கஞ்சா வாங்க வந்திருப்பது போல் பேசி அருணை தூக்கியது தனிப்படை. அப்போதைக்கு இருந்த 28 கிலோ கஞ்சாவையும் தனிப்படை கைப்பற்றியது.

அடுத்ததாக அருண் மூலமாக புகழேந்தியின் இருப்பிடத்தை அறிந்தனர். அங்கே சென்றபோது அப்பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக பதற்றம் நிலவி வந்தது. அந்த பதற்றம் தணிவதற்காக கடலூர் தனிப்படை காத்திருந்தது. ஆனால், எப்படியோ இதை ஸ்மெல் பண்ணிய புகழேந்தி அப்பகுதியில் இருந்து எஸ்கேப் ஆகப் பார்த்திருக்கிறான்.

தெலுங்கு சினிமா போல் துரத்திச் சென்று அவனை பிடித்தது கடலூர் தனிப்படை.
கடலூரில் இருக்கும் சில்லரை விற்பனையாளர்களுக்கு இந்த அருணும் புகழேந்தியும்தான் சப்ளை செய்வது. அப்படியெனில் இவர்களுக்கு யார் சப்ளை செய்வது? அவர்களிடம் விசாரித்தபோதுதான் விசாகப்பட்டினத்தின் புறகர் பகுதியான அனகபள்ளியைச் சேர்ந்த பிரதீப்தான் என்பதை கண்டறிந்தனர்.

கஞ்சா கடத்தலின் தேசிய மையம் அனகபள்ளி

ஆனால் அருணையும், புகழேந்தியையும் பிடித்த அளவுக்கு பிரதீப்பை கடலூர் தனிப்படையால் அவ்வளவு எளிதாக பிடிக்க முடியவில்லை. பிரதீப் இருக்கிற அனகபள்ளி என்பது கஞ்சா கடத்தலில் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி.

அனகபள்ளி என்பது கஞ்சா கடத்தலின் மையப்புள்ளியாக இருக்கிறது. மிக சமீபமாய் கடந்த பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் அனகபள்ளி மாவட்டம் மகவரபள்ளம் போலீஸார் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 500 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

பிப்ரவரி மாதம் 500 கிலோ என்றால் கடந்த ஜனவரி மாதம் இதே அனகபள்ளி மாவட்டத்தில் 35 ஆயிரம் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதை ஆந்திர டிஜிபி துவாரகா திருமலா ராவ் தெரிவித்தார்.

அனகபள்ளி மாவட்டத்துக்கு ஆந்திர கஞ்சா வியாபாரிகள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவைக் கொண்டுவருகின்றனர். இங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் வட இந்தியாவுக்கும், தலைநகர் டெல்லி வரைக்கும் கூட கஞ்சா கொண்டு செல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட கஞ்சா மையமாக அனகபள்ளி இருக்கிறது. இவ்வளவு அதிகமான கஞ்சா பிடிபட்டாலும், இன்னும் பிடிபடாத கஞ்சா அங்கே பெருமளவில் இருக்கிறது. காரணம் கஞ்சா வியாபாரிகளுக்கும் ஆந்திராவின் அப்பகுதி லோக்கல் போலீஸார் சிலருக்கும் இருக்கும் அண்டர்ஸ்டேண்டிங்தான்.

ஆந்திராவில் நடந்த அதிரடி சேஸிங்!

அனகபள்ளியில் இருக்கும் பிரதீப் மூலமாகத்தான் தமிழகத்துக்கு குறிப்பாக கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது என்பதை அறிந்த கடலூர் தனிப்படை போலீஸார், பிரதீப்பை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று அங்கே இருக்கும் லோக்கல் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால், பிரதீப்பை நெருங்கக் கூட முடியவில்லை தனிப்படையால். அதற்குக் காரணம் அங்கே இருக்கும் சில லோக்கல் போலீஸாரே பிரதீப்புக்கு தகவல் கொடுத்ததுதான். பிரதீப்பிடம் இருந்து கஞ்சா வாங்குகிற அருண், புகழேந்தி ஆகியோரை பிரதீப்பிடம் பேச வைத்து, ஒரு இடத்தை செட் பண்ணி பல மணி நேரம் காத்திருந்து ஒரு வழியாக பிரதீப்பையும் வளைத்தது கடலூர் தனிப்படை.

இப்படி கஞ்சா நெட்வொர்க்கின் மூன்று முக்கிய தலைகளை பிடித்த கடலூர் தனிப்படை போலீஸார், அதற்குப் பிறகுதான் இன்னொரு முக்கிய சம்பவம் செய்தனர்.

ஒரே இரவில் 19 பேர் கைது!

ஆந்திராவில் இருந்து கடலூர் திரும்பிக் கொண்டிருக்கும்போதே அருண், புகழேந்தி இருவரையும் அவர்களது போன்களில் இருந்தே கடலூரில் இருக்கும் சில்லரை கஞ்சா வியாபாரிகளுக்கு போன் போடச் சொல்லி ஸ்பீக்கரில் பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் பிடியில் இருக்கிறோம் என்பதை சொல்லாமல்… அவர்கள் தங்கள் சில்லரை வியாபாரிகளுக்கு ஸ்பீக்கரில் போன் போட்டு பேசி… எங்க வரணும், எங்க பணம் கொடுக்கணும் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். சில்லரை கஞ்சா வியாபாரிகளும் இது இயல்பாக நடக்கும் உரையாடல்தான் என கருதி அவர்கள் சொன்ன இடத்தில் காத்திருந்தனர்.

இந்த இன்புட்டுகளை வைத்துக் கொண்டு கடலூர் திரும்பிய தனிப்படை போலீஸார் சொல்லி வைத்தாற்போல் மார்ச் 27 ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை வரை சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத் தோப்பு, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், நெல்லிக்குப்பம் என கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கஞ்சா வியாபாரிகளை சுளையாக தூக்கினர். அந்த ஒரே இரவில் கடலூர் மாவட்டத்தில் ஆந்திர நெட்வொர்க் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று முடித்தனர்.

மார்ச் முதல் வாரத்தில் தொடங்கிய இந்த ஆபரேஷன், மார்ச் 28 ஆம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா நெட்வொர்க் இப்போதைக்கு துடைத்து எறியப்பட்டிருக்கிறது.

கஞ்சா ஒழிப்பில் முனைப்போடு செயல்பட்ட இந்த கடலூர் மாடலை, அனைத்து மாவட்டங்களும் பின்பற்றி கஞ்சா வியாபார நெட்வொர்க்கின் வேரை அறுக்க வேண்டும்! தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்! Cuddalore Police bust Ganja

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share