வணங்காமுடி
தம் கால் ட்ரேசிங்கில் சிக்கிய காக்கி
இப்போதெல்லாம் போலீஸ் அதிகமாக நம்பியிருப்பது சிசிடிவி கேமராக்களையும் செல்போன்களையும்தான். தலையைப் பிய்த்துக் கொள்ளக் கூடிய மர்மங்களைக் கூட தத்ரூபமாக எடுத்துக் காட்டுவது இவை இரண்டும்தான்.
கடலூர் சிறை உதவி அலுவலர் மணிகண்டனைக் குறிவைத்து அவரது வீடு நள்ளிரவில் எரிக்கப்பட்ட வழக்கில் போலீஸுக்கு சிசிடிவி ஃபுட்டேஜ்கள் கை கொடுக்கவில்லை. அதற்கு அடுத்து செல்போன்களை நம்பி ஆக்ஷனில் இறங்கியது டிஎஸ்பி டீம்.
டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, எஸ்.ஐ மணிகண்டன், கான்ஸ்டபிள் பாலா ஆகிய நான்கு பேரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு சம்பவம் நடந்த இடத்திலிருந்து டவர் தம் கால் போட்டனர். குறிப்பிட்ட நேரத்தில், அந்த குற்றம் நடந்த பகுதியில் இருக்கும் அத்தனை செல்போன் இணைப்புகளில் இருந்தும் யாருக்கு யார் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரிப்பதுதான் தம் கால் முறை. இதன் மூலம் அடிக்கடி பேசப்பட்ட எண்கள், நீண்ட நேரம் பேசப்பட்ட எண்கள், அல்லது அந்த நேரத்தில் மட்டும் பேசப்பட்ட எண்கள் என வகை பிரிப்பார்கள்.
பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ போன்ற ஆறு தகவல் தொடர்பு நிறுவனங்களில் இருந்தும் அந்த நேரத்தில் அந்த பகுதியில் இருக்கும் செல்போன்களின் கால் டீடெய்ல்ஸ் கேட்டு வாங்கினார்கள் போலீஸார். சைபர் க்ரைம் எஸ்.ஐ. ஐயப்பனை இந்த ஆபரேஷனில் வைத்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த நாள் அந்த நேரத்தில் வந்த, போன போன் கால்கள் அனைத்தும் ஆராயப்பட்டன. அந்த வகையில் வடிகட்டி 70 நம்பர்களை மட்டும் கையிலெடுத்தார்கள். அந்த எழுபது நம்பர்களையும் ஆளுக்கு பத்து நம்பர்கள் என ஏழு போலீஸாரிடம் பிரித்துக் கொடுத்து மீண்டும் அலசி ஆராய்ந்தனர்.
இதில், பெரும்பாலான கால்கள் கள்ளக்காதல் போன்களாக இருந்துள்ளது. ஒரு செல் போன் நம்பரை சந்தேகித்து அதன் லொகேஷன் தேடிப் போனால் அது வாழைத் தோப்புக்கு அழைத்துச் சென்றது. பிறகுதான் அவர் வாழை இலை, பழ வியாபாரி என்று தெரியவந்தது.
இதே நேரம் வெவ்வேறு திசைகளில் விசாரணையை முடுக்கிவிட்டார் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர். அதன்படி கடலூர் சிறையில் எண்ணூர் தனசேகரனுடன் இருந்த திருநெல்வேலி நாகு என்ற கைதி ஜாமீனில் சென்றதை அறிந்து அவரிடம் விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான தனி டீமை அனுப்பினார்.
அதே நேரம் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, எஸ்.ஐ மணிகண்டன், டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் ஆகியோர் கடலூரில் இருந்தபடியே தம் கால் டீடெய்ல்சை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
இப்படி பல எண்களை பின் தொடர்ந்து விசாரித்து விசாரித்து வடிகட்டியதில் சந்தேகத்துக்கு இடமான ஒரு செல்போன் நம்பர் கிடைத்தது. அந்த செல்போன் நம்பரின் முகவரியை ஆராய்ந்து பார்த்தால், டிஎஸ்பி கரிகால் பாரி சங்கருக்கு கிர்ர்ர்ரென ஷாக் அடித்தது. ஆமாம்…. தம் கால் முறையில் பல போன் நம்பர்களை விசாரித்து விசாரித்து வடிகட்டியதில் கடைசி வரை சந்தேகத்துக்கு இடமான அந்த நம்பர் கடலூர் மத்திய சிறைக்குள் காவலராக பணிபுரியும் செந்தில் குமார் என்பவரின் முகவரியைக் காட்டியது.
இப்போதுதான் விசாரணை டீமுக்கு ஒரு வெளிச்சப் புள்ளி தெரிந்தது. ஆனாலும் அந்த புள்ளி போலீஸ் துறைக்கு கரும்புள்ளியாகிறதே என்ற கவலையும் இருந்தது. டிஎஸ்பி ஒரு முறைக்கு மூன்று முறை விசாரித்தார். ‘ஏம்ப்பா… அந்த நம்பர் மத்திய சிறைக் காவலர் செந்தில் அட்ரசைதான் காட்டுதா?” என்று மீண்டும் மீண்டும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டார். ஆமாம்… அந்த சந்தேகத்துக்குரிய செல்போன் நம்பர் கடலூர் மத்திய சிறைக் காவலர் செந்தில்குமார் முகவரியைத்தான் காட்டியது.
வேறு வழியில்ல,,.,.அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் ஆரம்பித்தன.
கடலூர் முதுநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சிறைக் காவலர் செந்தில்குமாருக்கு போன் போட்டார்.
“சார்… செந்தில் குமார் சார்…. நான் ஓடி (ஓல்டு டவுன்) எஸ்.ஐ. பேசுறேன். எங்க சார் இருக்கீங்க?”
;’நான் சேலத்துல இருக்கேன் இப்ப. என்ன விஷயம் சொல்லுங்க’
‘இல்ல… நீங்க கடலூர் வந்ததும் கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வரணும். அதை சொல்றதுக்குதான் போன் போட்டேன்…’
இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போதே செந்தில்குமாரின் குரல் லேசாக உடைபடுவதை உணர்ந்தார் எஸ்.ஐ. மணிகண்டன்.
’சரி சார்… நீங்க கடலூர் வந்துட்டு உடனே வாங்க’ என்று கொஞ்சம் தொனியை தூக்கலாக்கி போனை துண்டித்தார்.
அப்போதில் இருந்து கடலூர் மத்திய சிறை காவலர் செந்தில்குமார் தொடர்புடைய அத்தனை செல்போன்களையும் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டது போலீஸ் டீம்.
சிறைக் காவலர் செந்தில்குமார் சேலத்தில் இருந்து கடலூருக்கு வந்ததும் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாரா?
(சிறைக் கதவு திறக்கும்)
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 2
