வணங்காமுடி
’மாமா.. டிஃபன் ரெடி பண்ணிட்டேன். சீக்கிரம் சாப்பிடுங்க, லேட்டா சாப்ட்டீங்கன்னா ராத்திரி தூக்கம் வராம சிரமப்படுவீங்க’ – மாமனார் ராமலிங்கத்திடம் பவ்வா சொன்னபோது ஆகஸ்டு 27 ஆம் தேதி இரவு 8 மணி இருக்கும். ‘தோ வர்றேம்மா…. நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே.., பசங்களோட விளையாட்டிட்டு வர்றேன்’ என்று கொஞ்சம் தாமதப்படுத்தினார் ராமலிங்கம்.
வயதானவர்கள் பெரும்பாலும் இரவு உணவை 8 மணி முதல் 8.30க்குள் முடித்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் செரிமானத்துக்கான வாய்ப்பு அதிகம் என்று ஒரு டிவி சேனலில் சொன்னதை வைத்து தன் மாமனாரை சாப்பிடக் கூப்பிட்டார் பவ்யா.
கடலூர் மத்திய சிறைக்கு அருகிலேயே இருக்கும் சிறை அதிகாரிகளுக்கான குடியிருப்பு அது. சிறை உதவி அலுவலர் மணிகண்டனின் குருவிக் கூடும் அந்த குடியிருப்பில்தான் இருந்தது. சொந்த ஊர் கும்பகோணம். அப்பா ராமலிங்கம் விவசாயம், அம்மா சுலோச்சானா. ஒரே பிள்ளை. படித்து முடித்து போலீசில் வேலை கிடைத்தது மணிகண்டனுக்கு. கல்யாணம் பிள்ளை குட்டிகள் என்றானது. பின் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம் என்றதும் அப்பா அம்மாவையும் கடலூர் அழைத்து வந்துவிட்டார் ஒரே பிள்ளையான மணிகண்டன்.
ஆகஸ்டு 26 ஆம் தேதி ஒரு வேலையாக கும்பகோணம் வரை சென்றிருந்தார் மணிகண்டன். வீட்டில் அவரது மனைவி பவ்யா, குழந்தைகள், அவரது அப்பா ராமலிங்கம், அம்மா சுலோச்சனா ஆகியோர் மட்டும்தான். தான் வெளியூர் சென்றாலும் குடும்பத்தை தன் மனைவி பவ்வா பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மணிகண்டனுக்கு நிறைய உண்டு. சிறைத் துறை என்பதால் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூரோ சென்னையோ செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் பவ்யாதான் குழந்தைகளையும், மாமனார் மாமியாரையும் பார்த்துக் கொள்வார்.
அந்த நம்பிக்கையில்தான் மணிகண்டன் அன்று கும்பகோணம் புறப்பட்டுச் சென்றார். பேரப் பிள்ளைகளோடு விளையாடிவிட்டு அப்படியே படுத்துவிட்டார் ராமலிங்கம். குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள். பவ்யாவும், மாமியார் சுலோச்சனாவும் கொஞ்ச நேரம் சீரியல் பார்த்துவிட்டு கொட்டாவி விட்டுவிட்டனர்.
அழகான பகலும் அமைதியான இரவும்தான் இதுபோல குடும்பங்களுக்கு இயல்பாகவே வழங்கப்பட்ட கொடை. அதேபோல குழந்தைகள் சத்தம், சீரியல் சத்தம், பேச்சு சத்தம் எல்லாம் முடிந்து ஃபேன் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். பவ்யா மட்டும் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பிள்ளைகள் உறக்கத்திலேயே புரண்டு புரண்டு வட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ஓர் உளவியல் இருக்கிறது. கணவன் ஊருக்கு சென்றிருந்தாலோ அல்லது நைட் ஷிப்ட் சென்றிருந்தாலோ பொதுவாக எந்த மனைவியருக்கும் இரவு தூக்கம் வராது. அவர்கள் தூங்குவதாக சொன்னாலும் அவர்களின் மனது விழித்துக் கொண்டுதான் இருக்கும். ஒரு சின்னப் பதற்றம் அவர்களுக்குள் எப்போதும் உறுத்திக் கொண்டுதான் இருக்கும். அப்படித்தான் அன்று இரவும் பவ்யாவின் கண்கள்தான் உறங்கிக் கொண்டிருந்தன. பொதுவாக பெண்களே ஒரு போலீஸ்தான். இங்கே போலீஸ் அதிகாரியின் மனைவி என்பதால் பவ்யாவுக்கு கூடுதல் விழிப்புணர்வும் சேர்ந்துகொண்டது.
இரவு 2 மணி இருக்கும்…. மேகங்கள் தத்தமது பகுதியை வேவு பார்த்துக் கொண்டே அலைந்துகொண்டிருந்தன. சிற்சில தெருநாய்களின் சத்தம் கூட மொத்தமாய் அடங்கிப் போன ஆழமான இரவு.
’டடங் டடங் டிடிடிங் டிடிடிங் டடங்……’ என பாத்திரம் ஒன்று தரையில் விழும் சத்தம் கேட்ட அடுத்த நொடியில் கண் விழித்தார் பவ்யா. சமையலறை மேடையில் இருந்து பாத்திரம் விழுவதை அந்த சத்தம் வரும் திசையில் இருந்தும் தூரத்தில் இருந்தும் கண்டுபிடித்துவிட்டார்.
பவ்யா கண் விழித்து சமையலறையை நோக்கிப் பார்க்க அதிர்ச்சி. அங்கே ஏதோ பற்றி எரிந்துகொண்டிருந்தது. பற்றாக்குறைக்கு பெட்ரோல் வாடை வேறு மூக்கைத் துளைத்தது. ஒரு நொடி கூட தாமதிக்காமல் பிள்ளைகளையும், மாமனார் மாமியாரையும் எழுப்பிவிட்டு அவர்களை வேகவேகமாக வீட்டை விட்டு வெளியே கூட்டி வந்துவிட்டார் பவ்யா.

இரவு 2 மணியில் எல்லாம் விழித்துப் பார்த்திராத அந்த பிஞ்சுகள், உறக்கத்தில் ஏதேதோ உளறிக் கொட்டினார்கள். மணிகண்டனின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பதற்றம், ‘என்னாம்மா ஆச்சு. ஏன் சமையலறையில தீ பிடிச்சிருக்கு?’ என்று கேட்டார்கள். ‘தெரியலை மாமா…. திடீர்னு சத்தம் கேட்டு முழிச்சுப் பாத்தேன்’ என்ற பவ்யாவுக்கும் பதற்றம் குறையவில்லை. அதற்குள் அக்கம்பக்கத்தினர் விழித்துக் கொண்டு ஓடிவந்தனர். தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸாரும் வந்துவிட்டனர். மணிகண்டனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. குடும்பத்தினரை பக்கத்து வீட்டில் தங்க வைத்தனர் போலீஸ் அதிகாரிகள்.
ஆமாம். நேர்மையான சிறை அதிகாரியான கடலூர் மத்திய சிறை உதவி அலுவலர் மணிகண்டனை கொல்வதற்கான ஸ்கெட்ச்தான் அந்த இரவு 2 மணிக்கு அரங்கேற்றப்பட்ட திட்டம். அடுத்த நாள் காலை சிறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மணிகண்டன் வீட்டுக்கு வந்தனர். எரிந்து கிடந்த கிச்சனை பார்வையிட்டனர்.

“மணிகண்டன் ரொம்ப நேர்மையான அதிகாரி. யார்கிட்டையும் எதையும் எதிர்பார்க்காதவர்.ஆனா சிறை அந்த மாதிரி அதிகாரிகளை பாத்து சிரிக்கும். கம்பி எண்ண வர்ற பலருக்கும் உள்ளே தேவையான வசதியை செஞ்சுக் கொடுத்துட்டு கரன்சி எண்ணுற வேலையதான் பல அதிகாரிகள் பார்த்துக்கிட்டிருக்காங்க. ஆனா மணிகண்டன் அப்படி இல்ல. அரசு கொடுக்குற சம்பளம்தான் அவரோட ஆதாரம். மத்தபடி ஜெயிலுக்கு வர்ற குத்தவாளிகளோட பாவக் காசை தொடமாட்டாரு. அதனாலதான் அவரையே தொட முடிவு பண்ணிட்டாங்க….” இப்படியாக சிறைத் துறை குடியிருப்பு முழுக்க பேச்சுக் குரல்கள்.

’ஸ்டாலின் ஆட்சியில் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை’ என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை மணிகண்டன் வீட்டு டிவியில் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மணிகண்டனின் அப்பாவுக்கு கண்களின் ஓரத்தில் இருந்து ஒரு துளி நீர் சொட்டியது.
இந்த நிலையில் கடலூர் டிஎஸ்பி டாக்டர் கரிகால் பாரி சங்கர், கடலூர் முதுநகர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ மணிகண்டன், புதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் ஆலோசனையில் அமர்ந்தனர்.

’மேலேர்ந்து ப்ர்ஷர். எதிர்க்கட்சிகளும் பிரச்சினைய கையிலெடுத்துட்டாங்க. இந்த விசயத்தை நாம ரொம்ப சீரியசா பாக்கணும்’’ என சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசித்தனர்.
அந்த ஆலோசனைக்குப் பின்னர்தான் அதிரடிகள் அரங்கேறின.
அந்த இரவு விடிந்தபோது பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
(சிறை திறக்கும்)
”என்னென்ன செய்தேன்…எப்படி செய்தேன்”-ரவுடி எண்ணூர் தனசேகரனின் அதிர வைக்கும் வாக்கு மூலம்!