விண்ணப்பத்தை நிராகரியுங்கள் முதல்வரே.. கடலூர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொதித்த சுந்தர்ராஜன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

cuddalore hydrocarbon

கடற்பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு எதிரான முந்தைய அரசின் அதே நிலைப்பாட்டை விஜய் தலைமையிலான த.வெ.க. அரசும் எடுக்க வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிகோரி ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சுமார் ரூ. 425 கோடி செலவில் இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் கடல்வளம் பாதிக்கப்படும் எனச் சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது குறித்துச் பூலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில், “கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடற்பகுதி CRZ-IVA எல்லைக்குள் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு CRZ அனுமதிகோரி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால், மேற்கொண்டு 4 கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் செயல்பாடு மிகுந்த சூழல் தாக்கம் உடையது. இது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

ADVERTISEMENT

கடல் பகுதிகளின் வெப்பம் அதிகரித்து அதன் சமநிலை சீர்குலைந்துள்ள நிலையில், இதுபோன்ற திட்டங்கள் கடற்பகுதி இயற்கை வளங்களை அழிக்கும்; மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கும்.

2025-இல் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு கடற்பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு எதிரானதாகவே இருந்தது. அதே நிலைப்பாட்டைத் த.வெ.க. அரசும் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இத்திட்டத்திற்கான CRZ அனுமதி விண்ணப்பத்தைத் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிந்துரைக்கக் கூடாது எனக் கோருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share