கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Cuddalore dmk Councillors against Mayor sundari
கடலூரில் இன்று (ஜனவரி 12) வழக்கமாக நடைபெறும் மாதந்திர மாமன்றம் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் துவக்கத்தில் 41வது வார்டு திமுக கவுன்சிலர் தமிழ் என்ற தமிழரசன் தலைமையில் பத்து கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மேயரிடம் குறைகளை பற்றி கேட்டனர்.
“எங்கள் வார்டுகளுக்கு எதுவுமே செய்யவில்லை, வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துதர முடியவில்லை, எதற்கு நாங்கள் கவுன்சிலராக இருக்கவேண்டும், நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்கிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது மேயர் சுந்தரி ஆதரவாளரான 42வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி செந்தில், திமுக கவுன்சிலரான 44வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனாவைப் பார்த்து, ‘பன்னி மேய்க்கற நீயெல்லாம் கேள்வி கேட்கறியா?’ என சாதி பெயர் சொல்லி கேட்டதால் மாமன்றம் களேபரமாக மாறியது.
உடனே திமுக கவுன்சிலர் தமிழரசன் தலைமையில் மாமன்றத்தில், கவுன்சிலர் விஜயலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயரிடம் புகார் கொடுத்தார் கீர்த்தனா. அதோடு 10 கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து, ஆணையர் காந்திராஜனிடம் முறையிட்டனர்.
அப்போது, “நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். எங்கள் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால் நாளை எஸ்பியிடம் புகார் கொடுங்கள்” என்று தற்காலிகமாக சமரசம் செய்து அனுப்பி வைத்தார் ஆணையர் காந்திராஜன்.
மேயர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி மேயர் சுந்தரி கணவரும் கடலூர் மாநகர திமுக செயலாளருமான கே. எஸ். ராஜாவிடம் பேசினோம்.

“கூட்டம் நடந்தபோது கடலூர் திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்கள்தான் பிரச்சினை செய்தனர், அப்போது 42ஆவது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி, ’45ஆவது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா பன்றி வளர்த்து வருகிறார், பன்றி பிடிக்க போகிறவர்களை அசிங்கமாக பேசி விரட்டி அனுப்பி விடுகிறார்’ என்றுதான் பேசினார், ஆனால் ‘பன்றி மேய்ப்பவர் என்றோ, சாதியை குறிப்பிட்டோ பேசவில்லை. சுயேட்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்” என்றார் கே.எஸ்.ராஜா .
கடலூர் மாநகராட்சி மேயருக்கு எதிராக கூட்டணி கட்சி மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். இந்த உட்கட்சி பிரச்சினையை அதிமுக, பாஜக உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறுகிறார்கள் மாமன்ற அதிகாரிகள்.
இந்த சம்பவம் நடந்த இன்று காலைதான், நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுகவின் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் மேற்கொண்ட சமரச முயற்சியின் காரணமாக நெல்லை மாமன்றத்திற்கு இன்று எந்த கவுன்சிலர்களும் செல்லவில்லை. அதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது.
இன்னொரு பக்கம் தஞ்சை மாநகராட்சியில் திமுக மேயருக்கும் துணை மேயருக்குமான மோதலில் மாநகராட்சி நிர்வாகம் தள்ளாடி வருகிறது,
இந்தசூழலில் கடலூர் மாநகராட்சியில் திமுக மேயர் சுந்திரிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
அயலகத் தமிழர்களுக்காக துவக்கப்பட்ட ‘எனது கிராமம்’ திட்டம்: சிறப்பு என்ன?
பிரபாஸின் கல்கி 2898 AD ரிலீஸ் தேதி எப்போது?
Cuddalore dmk Councillors against Mayor sundari
