விஜய் – சங்கீதா விவாகரத்து: பொதுவெளியில் பேச வேண்டாம் – சி.டி.ஆர். நிர்மல் குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகப் பகீர் குற்றச்சாட்டுகளைச் சங்கீதா தனது மனுவில் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகை ஒருவருடன் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சங்கீதா விவாகரத்து மனுத்தாக்கல் செய்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிக்கொண்டு, சங்கீதாவின் கண்ணியத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேசமயம், இந்த விவாகரத்துச் செய்தி குறித்து விஜய் தரப்பிலிருந்தோ அல்லது அந்த குறிப்பிட்ட நடிகை தரப்பிலிருந்தோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், சங்கீதா மீதான விஜய் ரசிகர்களின் இத்தகைய ‘டிஜிட்டல்’ தாக்குதலுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “விவாகரத்து என்பது அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து, பெண்களை இழிவுபடுத்தும் போக்கு ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும். விஜய்யின் பெயரைப் பயன்படுத்திப் பெண்களை இழிவுபடுத்துவதும், குறிப்பாகச் சங்கீதாவை ஆபாசமாகச் சித்தரித்துப் பதிவுகள் வெளியாகும்போதும் அதைக் கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மௌனம், அச்செயல்களுக்கு அவர் அளிக்கும் மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்,” என மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சங்கீதா மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில்: “பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். தவெக தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம்,” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share