2023 ஐபிஎல் கோப்பை இலக்கு: சிஎஸ்கே-வின் முடிவு சரியா? தவறா?

Published On:

| By christopher

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15க்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ள மற்றும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் தான் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

ADVERTISEMENT

விடுவிக்கப்பட்ட வீரர்கள்!

சிஎஸ்கே அணியில் இருந்து டுவைன் ப்ராவோ, ஆடம் மில்னே, ராபின் உத்தப்பா, கிறிஸ் ஜோர்டான், நாராயண் ஜகதீசன், ஹரி நிஷாந்த், கே.எம். ஆசிஃப் மற்றும் பகத் வர்வா ஆகிய 8 வீரர்களை விடுவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்!

அதேவேளையில் தோனி, ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருத்துராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ராயுடு, ட்வைன் ப்ரீடோரியஸ், மஹீஷ் தீக்‌ஷனா, பிரஷாந்த் சோலங்கி, தீபக் சஹார், முகேஷ் செளத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹன்கர்கேகர், மிட்செல் சாண்டனர், மதீஷ் பிரதிணா, சுப்ரன்சு சேனாபதி ஆகியோர் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஷ்வநாதன் கூறுகையில், ”இது மிகவும் கடின மனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ஏனென்றால் சிஎஸ்கேவில் வீரர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்போம். இதேபோன்று அவர்களும் அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை விடுவிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது.

பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் இணைந்து தான் யாரை தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என்பது குறித்து முடிவு எடுத்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாட முடியவில்லை. ஆனால் தற்போதைய சீசனில் நம்மால் சென்னையில் விளையாட முடியும். சென்னை மைதானம் எப்படி செயல்படும் என்ற ஆய்வின்படியே குறிப்பிட்ட வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிக்கப்பட்ட, தக்கவைத்துள்ள வீரர்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

csk team will win 2023 ipl cup

பெரிய இழப்பு பிராவோ தான்!

சென்னை அணி விடுவித்துள்ள பட்டியலில் பெரிய இழப்பாக கருதப்படுவது பிராவோ தான். ஏனெனில் 2011ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் இருக்கும் ப்ரோவோ இதுவரை 116 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் அவர் 137.15 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1004 ரன்களைக் குவித்ததோடு, 140 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணியில் பிராவோ இடம்பிடித்திருந்ததும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கோப்பையை வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று இங்கிலாந்தைச் சேர்ந்த அனுபவ ஆல்ரவுண்டரான கிறிஸ் ஜோர்டன் விடுவிக்கப்பட்டதும் சென்னை அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

ஏனெனில், நடப்பு உலகக்கோப்பையில் நெருக்கடியான கடைசி 2 ஆட்டத்தில் விளையாடிய ஜோர்டன் முக்கியமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.

சென்னை அணியின் மற்றொரு பிரபல வீரரான ராபின் உத்தபா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவரை விடுவிப்பதாக சிஎஸ்கே தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான நாராயண் ஜகதீசன் இதுவரை ஏழு சீசன்களிலும், ஹரி நிஷாந்த் இரண்டு சீசன்களில் விளையாடியுள்ளனர். ஆனால் தங்களுக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்த தவறியது அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

csk team will win 2023 ipl cup

தோனி தலைமை முக்கியம்!

சாம்பியன் அணிகளுள் ஒன்றான சிஎஸ்கேவின் அசைக்கமுடியாத நங்கூரமான தோனி வரும் ஐபிஎல் போட்டியிலும் கேப்டனாக செயல்பட உள்ளார். அவரது தலைமையில் 4 முறை சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், அடுத்த தலைமுறை அணியை உருவாக்க அவரது வழிகாட்டலும், தலைமையும் முக்கியம் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

ஜடேஜாவின் மகிழ்ச்சி!

சென்னை அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் தக்க வைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

கடந்த சீசனில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தொடர்பாக அணி நிர்வாகத்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர் இந்த ஆண்டு அணியில் நீடிப்பாரா என்றும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மீண்டும் சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியுடன் நிற்பது போன்ற புகைப்படத்துடன், ”அனைத்தும் நன்றாக உள்ளது.” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ஜடேஜா.

கடந்த 2021ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் மதிப்பில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

csk team will win 2023 ipl cup

ஆல்ரவுண்டர்கள் நிறைந்த சிஸ்கே!

சென்னை அணி ஆல்ரவுண்டர்களை குறிவைத்தே வீரர்களை தக்கவைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தக்கவைக்கப்பட்டுள்ள 18 பேரில் மொயீன் அலி, ஷிவம் துபே, ட்வைன் ப்ரீடோரியஸ், ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்‌ஷனா, ராஜவர்தன் ஹன்கர்கேகர் என 6 பேர் ஆல்ரவுண்டர்கள் ஆவர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் ருத்துராஜ் கெயிக்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே தக்கவைத்துள்ள அணியில் மற்றொரு சர்ப்ரைஸ் 33 வயதான அம்பாத்தி ராயுடு தான். ஏனெனில் கடந்த ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 124.31 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 271 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதனால் பலரும் அவரை தக்கவைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேவேளையில் கடந்த 2018ம் ஆண்டு 6.75 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் அம்பத்தி ராயுடு. அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் தொடரில் ஒரு சதத்துடன் 602 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி வீரர்களை தவிர்த்து அணியில் இளம் வீரர்களும் தக்கவைக்கப்படுள்ளனர்.

பேட்ஸ்மேனாக சேனாதிபதி, சுழற்பந்துவீச்சாளர்களாக, சமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி ஆகியோரும், வேகபந்துவீச்சாளர்களாக முகேஷ் செளத்ரி, மதீஷா பிதிரணா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரும் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

csk team will win 2023 ipl cup

ஏலத்தில் யாருக்கு முன்னுரிமை?

கொச்சியில் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் சென்னை அணியிடம் கூடுதல் பணம் 5 கோடி ரூபாயும் சேர்த்து தற்போது கைவசம் ரூ.7.95 கோடி உள்ளது.

இந்த தொகையில் சென்னை அணியானது, இங்கிலாந்தின் உலகக்கோப்பை நாயகன் சாம் கரன், இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர், அதிரடிக்கு பேர்போன பங்களாதேஷின் லிட்டன் தாஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், அணியின் சிஇஓ விஸ்வநாதன் கூறியது போல், மீண்டு வந்து 2021ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது போல், அடுத்த ஆண்டும் தோனியின் தலைமையில் கோப்பையை கைப்பற்றக்கூடிய கம்பீரமான அணியை சிஎஸ்கே தேர்ந்தெடுக்கும்.” என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

போலாந்தில் விழுந்த ஏவுகணை: ஜி20 மாநாட்டின் இடையே அவசர கூட்டம்!

ஜி.வி.பிரகாஷ் குரலில் ‘ஓ பெண்ணே’ ஆல்பம்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share