சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி!

Published On:

| By Selvam

நடப்பு 2024 ஐபிஎல் தொடரில், இதுவரை சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

ஆனால், சென்னை அணி இந்த இடத்திற்கு வர தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்தது. முதலாவதாக, இந்த தொடரின் துவக்கத்திலேயே சென்னை அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான டேவன் கான்வே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இதை தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாத்துடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க ஒரு சரியான இணை இல்லாமல், ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோரை மாற்றி மாற்றி சென்னை அணி களமிறக்கி வந்தது.

இதை தொடர்ந்து, சென்னை அணிக்கு கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மான், மிக சிறப்பாக பந்துவீசிவந்த நிலையில், ஜிம்பாப்வே எதிரான தொடரில் பங்கேற்பதற்காக அவர் சென்னை அணியில் இருந்து விலகினார். இவர் சென்னை அணிக்காக 9 போட்டிகளில், 14 விக்கெட்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து, சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக கருதப்பட்ட மதீச பத்திரன, காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காத நிலையில், திடீரென சிகிச்சைக்காக தாயகம் திரும்பினார். இவர், சென்னை அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 13 விக்கெட்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், சென்னை அணியின் பவர்-பிளே எக்ஸ்பர்ட்டான தீபக் சஹரும் காயம் அடைந்தார். அவரின் காயம் தீவிரமாக உள்ள நிலையில், சஹர் மீண்டும் அணிக்கு திரும்புவது சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில், மிகுந்த அனுபவம் இல்லாத இளம் பந்துவீச்சாளர்களை வைத்தே சென்னை வெற்றி பெற்றது.

இந்நிலையில், வரும் மே 22 அன்று துவங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தங்கள் சொந்த நாட்டிற்கு விரும்பி வருகின்றனர்.

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லெ ஆகியோர், தங்கள் அணிகளில் இருந்து விலகி, சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

https://twitter.com/rajasthanroyals/status/1790005446926901507

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள மொயீன் அலியும், விரைவில் சென்னை அணியில் இருந்து விலகி தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 18 அன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முக்கியமான ஆட்டம், அதில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் ஆட்டங்கள் என அடுத்தடுத்து மிக முக்கிய போட்டிகளில் விளையாடவுள்ள சென்னை அணிக்கு, இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, கொல்கத்தாவுக்கு அதிரடியாக விளையாடிவரும் பில் சால்ட், சாம் கர்ரன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் விரைவில் இங்கிலாந்து திரும்பவுள்ளனர்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்ரீகாந்த்: விமர்சனம்!

பாலியல் குற்றச்சாட்டு: ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share