ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. csk lost to kkr and register continous 5 defeats
சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று (ஏப்ரல் 11) இரவு எதிர்கொண்டது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரர்கள் மைதானத்திற்குள் பேஷன் ஷோ செல்வது போல, வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

எனினும் ஆல் ஆவுட் ஆகிவிடக் கூடாது என மிக மிக பொறுமையுடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே குவித்தது. இது சேப்பாக்கத்தில் சென்னை அணி அடித்த குறைந்த ஸ்கோர் ஆகும்.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி துவக்க வீரர்களான டி காக் (23) மற்றும் சுனில் நரைன் (44) சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரகானே (20*) மற்றும் ரிங்கு சிங் (15*) இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடி அணியின் வெற்றியை வெறும் 10.1 ஓவர்களில் உறுதி செய்தனர்.

சென்னை அணி தனது இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடித்த நிலையில், கொல்கத்தா அணி 10 சிக்சர்களை விளாசி வெற்றியை தனதாக்கியது.
இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் தோற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
அதே போன்று, ஒரு சீசனில் தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் சிஎஸ்கே தோல்வியடைந்ததும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.