CSK vs PBKS : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று (ஏப்ரல் 8) விளையாடிய சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு அணி வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கே காரணம் என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். csk continued its 4th defeat in ipl 2025
சண்டிகரின் முல்லன்பூரில் நேற்று இரவு பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், அவர் வெறும் 39 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து 220 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில், கான்வே, துபே, தோனி ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் அபாரமான பந்துவீச்சால், சென்னை அணியை 201 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, 18 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி,
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி முதல் போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின், தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
தோல்விக்கு கேட்ச் டிராப் முக்கிய காரணம்!
போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், ”சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பிரியன்ஷ் ஆர்யா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரின் ரிஸ்க் மிகப்பெரிய பலனை அந்த அணிக்கு கொடுத்துள்ளது.
கடைசி 4 போட்டிகளில் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் உச்சத்தில் இல்லை. கேட்ச்களை கோட்டைவிட்ட பின், அதே பேட்ஸ்மேன் கூடுதலாக 30 ரன்களை விளாசுகிறார்கள்.

நாங்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். ஒருவேளை 15 ரன்களை குறைத்திருந்தால், சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனாலும் தோல்விக்கு கேட்ச் டிராப் முக்கிய காரணமாக உள்ளது.
ஃபீல்டிங்கின் போது கொஞ்சம் உற்சாகமாக இருக்க வேண்டும். பதற்றமாக இருந்தால் கேட்ச்களை கோட்டைவிடுவோம். சில நேரங்களில் 2 முதல் 3 ரன்களை தடுத்து, ஒரு ரன் அவுட் செய்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் மோசமான நாள் அமையும். ஆனால் ஃபீல்டிங்கிற்கு அப்படி இருக்க கூடாது” என்று ருத்துராஜ் தெரிவித்தார்.