தோனி ஓய்வா? CSK-வின் காசி விஸ்வநாதன் சொன்ன புதிய தகவல்!

Published On:

| By Selvam

2024 ஐபிஎல் தொடர் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், ரசிகர்களிடம் மீண்டும் ‘தல’ தோனியின் ஓய்வு குறித்து ஐயம் எழுந்துள்ளது.

முன்னதாக, 2024 ஐபிஎல் தொடருக்கு பிறகு, தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்த நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

இம்முறையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் தோனி இன்னும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன், அந்த அணியின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் (தோனி) அடுத்த ஆண்டு விளையாடுவார் என நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். எனது விருப்பமும், ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அதுவே”, என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “இந்த கேள்விக்கான பதிலை எம்.எஸ் (தோனி) மட்டுமே கூற முடியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் மதிப்பளிப்போம். உங்களுக்கு தோனியை பற்றி நன்றாகவே தெரியும். அவரின் முடிவுகள் அவரே தீர்மானித்து அதை சரியான நேரத்தில் அறிவிப்பார்”, எனவும் தெரிவித்திருந்தார்.

2024 ஐபிஎல் தொடரின்போதே, கால் தசை நார் கிழிவு காரணமாக அவதிப்பட்டுவந்த தோனி, அதற்காக லண்டனில் விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது ஓய்வு குறித்து, அவர் 2 மாதங்கள் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவை மட்டுமின்றி, தோனியின் ஓய்வு குறித்த முடிவில் ஐபிஎல் தொடரில் அமலில் உள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறை முக்கிய பங்கு வகிக்கும் என ஒரு சிஎஸ்கே நிர்வாகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, ‘ஸ்டீபன் பிளெமிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளாரா?’, என்ற கேள்விக்கு, “நான் ஒரு முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளீர்களா என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் விண்ணப்பிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். ஒரு வருடத்தில் தொடர்ந்து 9-10 மாதங்களுக்கு பயிற்சியாளராக பணியாற்ற அவருக்கு விருப்பம் இல்லை என நான் எண்ணுகிறேன். இதற்குமேல், இது குறித்து நாங்கள் எதுவும் விவாதித்துக்கொள்ளவில்லை”, என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அந்த பொறுப்புக்காக பிசிசிஐ தன்னை அணுகியதாகவும், ஆனால் குடும்பத்துடன் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும் என்ற விருப்பத்தால், அதை நிராகரித்து விட்டதாகவும் ரிக்கி பான்டிங் தெரிவித்திருந்தார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வள்ளுவருக்கு காவி… ஆளுநர் இப்படி செய்யலாமா? – செல்வப்பெருந்தகை காட்டம்!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share