மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலையையடுத்து, இந்தியாவின் எரிசக்தி மற்றும் உரம் துறைகளின் தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மார்ச் 22-ந் தேதி உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னெச்சரிக்கையாக எதிர்கொள்ளும் விதமாக இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது,
இந்த உயர்நிலைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் எந்தவிதத் தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும், இதற்கான போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் மோடி உத்தரவிட்டார்.
ஹார்முஸ் ஜலசந்தி போன்ற பதற்றமான பகுதிகளைத் தவிர்த்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
