தனது வீட்டில் நகை திருடுப்போனதாக கொடுத்த புகாருக்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜம்மு காஷ்மீரில் ராணுவ சீருடையில் வீராங்கனை ஒருவர் அழும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வேலுார் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பெண் கயல்விழி, சிஆர்பிஎப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் வெளியிட்ட வீடியோவில், என் பேர் கயல்விழி. எங்க அம்மா ஜூன் 24ஆம் தேதி 3.30 மணிக்கு மாடு மேய்க்க போனபோது, யாரோ வீட்டின் பூட்டை உடைத்து என் கல்யாணத்துக்காக சேர்த்து வைத்த நகையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ட்டாங்க.
மாடு ஆடு மேய்க்க சென்ற அப்பா அம்மா திரும்பி வந்த போது, நகை திருடு போயிருப்பதை கண்டு கதறி அழுதனர். இதனால் என் அண்ணன் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
ஜூன் 24ஆம் தேதி இரவு கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மறுநாள் முதல்வர் வருகிறார் பந்தோபஸ்துக்கு போக வேண்டுமென போலீசார் வரவில்லை. மறுநாள் 12.30 மணிக்கு கைரேகை நிபுணர்கள் வந்தார்கள்.
28ஆம் தேதி வரை எப்.ஐ.ஆர் போடவில்லை. நான் எவ்வளவு முயற்சி செய்தும் போலீசார் கேஸ் எடுக்கவில்லை. எங்கள் வீட்டில் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டிலிருந்து 22 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம்,பட்டு புடவைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்” என்று கதறி அழுகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் மரியாதையுடன் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிஆர்பிஎஃப் ஜவான், இந்த ஆண்டு ஜூன் மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடுபோன வழக்கில் காவல்துறையின் நடவடிக்கையின்மை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தோளில் தேசியக்கொடு ஏந்தியபடி, சீருடையில் இருக்கும் பெண்ணை நீதிக்காக ஆன்லைனின் கெஞ்ச வைத்திருப்பது என்ன மாதிரியான நிர்வாகம்?
இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.









