திருப்பதியில் தரிசன டிக்கெட் வாங்க செல்லும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தன் மனைவியை இழந்த தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை (ஜனவரி 11) சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி இலவச தரிசனத்துக்கான டோக்கன் இன்று அதிகாலை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று மதியம் முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அலைமோதினர்.
இந்த நிலையில் நேற்று இரவு டோக்கன் வரிசை கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா உட்பட 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த மல்லிகாவின் கணவர் கிருஷ்ணன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
என் மனைவி இடுப்பு எலும்பு உடைஞ்சி போச்சி!
அவர் கூறுகையில், “சேலம் மேச்சேரியில் இருந்து 10 பேர் திருப்பதிக்கு வந்தோம். எங்களுடன் வந்தவங்க நேற்று நைட்டு கிளம்பிட்டாங்க.. நானும் எனது மனைவியும் சொர்க்கவால் தரிசன டோக்கன் வாங்க இங்கேயே இருந்தோம்
அதிகாலை 6 மணிக்கு டோக்கன் கிடைக்கும்னு சொன்னாங்க. நாங்க வரிசைல போய்கிட்டு இருந்தோம். ஆனால் திடீரென கூட்டத்துல நெரிசல் ஏற்பட்டு என் மனைவி மல்லிகாவை மிதிச்சிட்டாங்க. இதில் அவரோட இடுப்பு எலும்பு உடைஞ்சி போச்சி. அவங்கள அங்க இருந்து கூட்டி வரும்போதே உயிர் போயிடுச்சி… கையில ஒரு காசும் இல்ல… இப்போ என்ன பண்றதுனே தெரியல” என்று அழுதபடி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
இந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “திருப்பதியில் நடந்த நெரிசல் சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இதுவரை எந்தவித இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக திருப்பதி விரைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருப்பதியில் கூட்ட நெரிசல் : தமிழக பெண் உட்பட 6 பேர் பலி.. யார் காரணம்?
