திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் என தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பதி வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி இலவச தரிசனத்துக்கான டோக்கன் இன்று அதிகாலை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவில் இருந்தே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் டோக்கன் வாங்க குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா உட்பட 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக திருப்பதி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை!
இதற்கிடையே இந்த துயர சம்பவம் குறித்து தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர், “இந்த துயரமான நேரத்தில் நாம் யாரையும் குறை கூற முடியாது. கவலைப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு மையத்தில் பக்தர் மயங்கிய நிலையில் இருந்தபோது, டிஎஸ்பி கேட்டை திறந்ததால் டிக்கெட் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் பக்தர்கள் ஒன்றாக உள்ளே நுழைய முயற்சி செய்தார்கள். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
டெலிகான்பரன்ஸ் மூலம் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. கூட்ட நெரிசல் குறித்து முந்தைய தினமே அதிகாரிகளை எச்சரித்திருந்தேன். ஆனால் அதிகாரிகள் இதை சரியாக கையாளாததால் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி செல்கிறார் சந்திரபாபு நாயுடு
உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மகர விளக்கு: சபரிமலையில் பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!