வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் 27.11.2025 லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ), தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 1)முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர் வேளாண்பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
டிட்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
