தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “நாம் எதிர்பார்த்தபடி புயல் ஆந்திராவை நோக்கிச் செல்லாமல் சென்னைக்கு அருகிலேயே நிலை கொண்டது. தற்போது புயலாக இல்லாமல், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. நாளை காலை வரை இதேபோல விட்டுவிட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று சராசரியாக 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக,
- எண்ணூர்: 26 செ.மீ
- பாரீஸ்: 25 செ.மீ
- முல்லம், ஐஸ்ஹவுஸ்: 22 செ.மீ
- மணலி நியூட்டன்: 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
54 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 1127 குடும்பங்களைச் சேர்ந்த 3534 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மழைக்கு விழுப்புரம், மயிலாடுதுறை பகுதிகளில் மின்சாரம் தாக்கி இருவர், தூத்துக்குடி, தஞ்சாவூர் பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து இருவர் என 4 பேர் உயிரிழந்தனர். 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.
தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள் (330 பேர்) சென்னை மாநகராட்சி பொறுப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை உடனடியாகக் கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சுமார் 85,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பாதிப்பு இருக்கும் என்று தற்காலிகமாக கணக்கிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
