தீபாவளிக்கு அடுத்து அனைவராலும் கொண்டாடப்படும் நாளாக மாறிவிட்டது ஆங்கிலப் புத்தாண்டு திருநாள். விடிய விடிய கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் கோயில்கள், கடற்கரை என அனைத்து இடங்களிலும் கூட்டத்துக்குக் குறைவிருக்காது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லும் தருணங்களில் இந்தத் திருநாளைச் சிறப்பாக்க இந்த கிரிஸ்பி வெஜிடபிள் ஃப்ரிட்டர்ஸ் உதவும்.
**எப்படிச் செய்வது?**
அகலமான பாத்திரத்தில் ஒரு கப் நீளவாக்கில் நறுக்கிய புரொக்கோலி, காலிஃப்ளவர், பேபி கார்ன், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, குடமிளகாய் காய்கறிக் கலவையுடன் ஒன்றரை டேபிள்ஸ்பூன் ரெட் சில்லி பேஸ்ட், ஒரு டீஸ்பூன் வினிகர், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், இரண்டு டீஸ்பூன் தக்காளி சாஸ், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், நான்கு டேபிள்ஸ்பூன் சோள மாவு, இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா மாவு, ஒரு டீஸ்பூன்இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் தெளித்துத் தோசை மாவுப் பதத்துக்குக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிக் கலவையைக் கைகளால் பிசிறி சிறிது சிறிதாக (பக்கோடா போடுவதுபோல்) போட்டு மொறுமொறுவெனப் பொரித்தெடுக்கவும். மேலே சாட் மசாலாத்தூள் தூவி, சூடாகப் பரிமாறவும்.