கிரிமினல் திரைப்படத்தின் கதைக்கான ஐடியா டீக்கடையில் வைத்து தோன்றியதாக இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கிரிமினல்’.
படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்க, ஒளிப்பதிவு பிரசன்னா எஸ்.குமார்.
‘கிரிமினல்’ படத்தின் மூலம் தக்ஷிணா மூர்த்தி இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி பேசும்போது, “எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
நான் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, ஒன்றிரண்டு கதைகளை எழுதியிருந்தேன். அவற்றை நிறைவேற்றுவதற்கு நிறைய தடைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், ஒரு டீக்கடையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் இந்தக் ‘கிரிமினல்’ படம் ஆரம்பித்த புள்ளி.
கதைக்குள் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் வந்த பின்பு, படம் இன்னும் பெரிதாகியது. படத்தில் எந்த விதத்திலும் தலையிடாமல் எனக்கு தேவையான சுதந்திரத்தைத் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். மிகப் பெரிய பொருட்செலவில் படம் சிறப்பாக வந்துள்ளது.
மதுரையை களமாகக் கொண்ட பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் இருந்து ‘கிரிமினல்’ திரைப்படம் விதிவிலக்காக இருக்கும். நகரத்தில் நடக்கும் க்ரைம்-த்ரில்லரையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம்.
ஒரு வயதான பெண்மணி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்து, ’உண்மையிலேயே மதுரையில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்.
படப்பிடிப்பின்போது எனக்கு இருந்த மன அழுத்தம் முழுவதும் அவரது பாராட்டு வார்த்தைகளால் காற்றில் மறைந்தது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே படம் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கும் சீக்கிரம் படத்தைக் காட்ட ஆர்வமாக உள்ளோம்”என்றார்.
இராமானுஜம்
இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி
மதுரை ரயில் தீ விபத்து: 6 பேர் பலி!