படங்களும் வெப் சீரியல்களும் வெளியாகும் சமயங்களில் எல்லாம் அவ்வப்போது ராஜேஷ்குமாரின் முக நூல் பதிவுகளில் அவரது வேதனை வெளிப்படும்.
‘இது என் கதை .. இந்தப் படத்தில் வரும் இந்தக் காட்சிகள் என் நாவல்களில் உள்ளவை .. ஆனால் என்னிடம் அனுமதி வாங்க வில்லை. தகவல் கூட தெரிவிக்கவில்லை. ஒரு நன்றி கார்டாவது போடும் நன்றி உணர்ச்சி கூட இல்லை..” என்றெல்லாம் தனது வேதனையை பகிர்ந்திருப்பார் ராஜேஷ்குமார்.
சில சினிமாக்காரர்கள் தன் கதையை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றிய கதைகளும் அவர் பதிவில் இருக்கும் தவிர அவர் கதையில் வந்த சில படங்களும் ஓடவில்லை.
இனி அந்த வேதனை இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது
ராஜேஷ்குமார் எழுதிய கதை ஒன்றின் கருவை எடுத்துக்கொண்டு தினகரன் என்பவர் எழுதி இயக்கிய ரேகை என்ற வெப் சீரிஸில் ராஜேஷ்குமாரும் முறையான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பால ஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை கண்முன்னே இருந்தும் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலும் , கிடைக்கும் ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ .
உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?
S.I. வெற்றி (பால ஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் ஒரு துண்டிக்கப்பட்ட கை இருக்கிறது.
அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், ரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.அப்புறம் என்ன என்பதே இதன் கதை என்கிறார்கள்.
தொடர் பற்றி எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது. “ஒவ்வொரு குற்றக் கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும் போது, அந்தக் கதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது “என்கிறார்.
குற்றம் உங்களை பயமுறுத்தாது — குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும் என்றெல்லாம் பில்டப் கொடுக்கப்படும் இந்த ரேகை ’ ZEE5-இல் நவம்பர் 28 முதல் காணக் கிடைக்கும்.
இது மட்டுமின்றி நடிகர் சந்தானம் தனது அடுத்த படத்துக்காக கோவைக்குப் போய் ராஜேஷ்குமாருடன் தங்கி கதை விவாதம் செய்து வந்ததையும் அதில் தனக்கு திருப்தி என்பதையும் சந்தானமே பதிவு செய்து இருக்கிறார்.
இனி ராஜேஷ்குமாரின் முக நூல் பதிவுகள் தனது கதை பற்றிய விஷயங்களில் சந்தோஷ செய்திகளையே சொல்லட்டும்.
ராஜ திருமகன்
