தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், இதுவரை மூன்று என்கவுன்டர்கள் நடந்துள்ளது. crime cases increase tamilnadu
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி காவல், தீயணைப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளிக்கிறார்.
இந்தநிலையில், காவல்துறை தலைமை, அனைத்து மாவட்ட, மாநகர எஸ்.பி, டிஐஜி, ஐஜி-க்களுக்கும் மாநகர துணை ஆணையர் முதல் ஆணையர் வரையிலும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் ரவுடிகளை உடனடியாக கைது செய்யவும், சிறையில் முக்கிய கைதிகளை தனிமைப்படுத்தி குற்றங்களை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், “முக்கிய ரவுடிகள், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், நீண்ட காலம் வாரண்டில் உள்ள குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து சிறையில் அடைக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனால், சமீப நாட்களில் 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து மத்திய சிறைகளில் அடைத்துள்ளோம்.
மேலும், குற்றங்கள் நடைபெற சிறைகள் களமாக இருப்பதால் காவல்துறை அதிகாரிகளும் சிறைத்துறை அதிகாரிகளும் கூட்டாக சேர்ந்து ஆலோசனை செய்துள்ளனர். அதில் சிறையில் உள்ள முக்கிய ரவுடிகளை கண்காணிப்பது, செல்போன் பயன்படுத்துவர்கள், ஒவ்வொரு மாதமும் அதிகமாக வழக்கறிஞர்களை சந்திப்பவர்கள் என ஆக்டிவாக இருக்ககூடிய ரவுடிகள் தனி சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.