கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால்(32) தற்போது ரஞ்சி தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அவர் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு தன்னுடைய குழுவினருடன் பயணம் செய்துள்ளார். போட்டியில் வென்ற பிறகு குஜராத் மாநிலம் சூரத் செல்வதற்காக இன்று(ஜனவரி 3௦) விமானம் ஏறியுள்ளார்.
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தபோது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அகர்தலாவில் உள்ள ஐ.எல்.எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது கிடைத்த தகவல்களின்படி தொண்டையில் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அதோடு விமானத்தில் அவர் வாந்தி எடுத்ததால் சில சோதனைகள் அவருக்கு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அபாயகட்டத்தை அகர்வால் தாண்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2௦21-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அகர்வால், ஐபிஎல் தொடரில் தற்போது ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
டெஸ்ட் தொடரை பொறுத்தவரை கடைசியாக 2௦22-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, அகர்வால் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…