கோப்பை வழங்கும் நிகழ்ச்சிக்கு கவாஸ்கரை அழைக்காதது ஏன்? – ஆஸ்திரேலியா விளக்கம்!

Published On:

| By Kumaresan M

இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணி 10 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் வென்றுள்ளது. கடைசி இரு தொடர்களையும் அந்த அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவிடம் இழந்திருந்தது.

இந்த நிலையில், டிராபி வழங்கும் விழாவுக்கு கவாஸ்கரை அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடைசி போட்டி நடந்த சிட்னி மைதானத்தில் கவாஸ்கர் இருந்தும் அழைக்கப்படவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு இரு ஜாம்பவான்கள் பெயரில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.

ஆனால், இந்த முறை கோப்பை வழங்கும் விழாவுக்கு கவாஸ்கர் மேடைக்கு அழைக்கப்படவில்லை. எனவே, போடியத்தில் இருந்த பார்டர் மட்டுமே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடத்தில் கோப்பையை வழங்கினார்.

இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கோப்பையை வழங்க பார்டர் மற்றும் கவாஸ்கர் இருவரும் மேடையில் இருந்திருந்தால் அது விரும்பத்தக்கதாக இருந்திருக்கும். எனினும், சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா கோப்பையை தக்க வைத்தால் மட்டுமே கவாஸ்கரை மேடைக்கு அழைப்போம் என்று ஏற்கனவே அவரிடம் தெரிவித்திருந்தோம்” என்கிறார்.

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், “இதற்காக நான் வருத்தபடவில்லை. ஆனால் நான் கொஞ்சம் குழப்பமாக உணர்கிறேன். இது பார்டர்-கவாஸ்கர் டிராபி. எனவே,நாங்கள் இருவரும் அங்கு இருந்திருக்க வேண்டும். நானும் ஒரு இந்தியராக எனது நண்பர் பார்டருடன் சேர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை கொடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

எம்.குமரேசன்

ஆளுநர் வெளிநடப்பு… ஸ்டாலின் டூ விஜய்… ரியாக்‌ஷன் என்ன?

48 வருடத்தில் நடக்காத ஒன்று… சீமானுக்கு பபாசி கடும் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share