ADVERTISEMENT

பட்டாசு வெடிக்கும் நேரம்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை!

Published On:

| By Minnambalam

தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

“தீபாவளி பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன.

அதன்பேரில் வரும் 24ஆம்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அவசர உதவி எண் 112 மற்றும்,

அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்புகொண்டு மனித உயிர்களைக் காப்பாற்றி பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

உச்ச நீதிமன்றம் பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வரையிலும் மொத்தம் 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விதி 89இன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். பைக், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் அருகிலும், பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

பட்டாசுகளைக் கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சி செய்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்த உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஆகவே, பட்டாசுகளைக் கொளுத்தித் தூக்கி எறிந்து விளையாடக் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது” என்று எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்ததற்கு எதிராக 184 வழக்குகளும்,

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 848 வழக்குகளும்,

மாநகர காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

-ராஜ்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share