பட்டாசு ஆலை வெடி விபத்து: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Published On:

| By Monisha

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு உற்பத்தி ஆலையில் நேற்று (மார்ச் 23) வெடி விபத்து ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பட்டாசு ஆலையே இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமான நிலையில், சிறுவன் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் உட்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 23) காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

பட்டாசு ஆலைகளில் விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்த கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

அதிமுக சார்பில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்குப் பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ”வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்ததுமே உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகளைத் தடுக்க கருத்தரங்கங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் சிறிய பட்டாசு ஆலைகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரிந்து வரும் காரணத்தால் தான் இது போன்ற விபத்துகள் நடைபெற்று வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மோனிஷா

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் தாக்கல் செய்த முதல்வர்

கிருஷ்ணகிரி ஆணவ கொலை: எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share