தொகுதிக்கு நல்லது செய்தால் வெற்றி பெறலாம் என்று சொன்னால் அதை நம்பாதீர்கள். அதற்கு உதாரணம் கொளத்தூர் தான் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளது. புதிய அரசு மீது திமுக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது.
இந்தநிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், புதிய அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும், திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது வேறு, ஆனால் தற்போது திமுகவினர் நடந்துகொள்வது வேறு விதமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
நேற்றிரவு ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.பி.செல்லப்பிள்ளை படத்திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
மாற்றத்தை விரும்பிய மக்கள்
இதில் பேசிய பெ.சண்முகம், “தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள் என்பது பளிச்சென்று வெளி வந்திருக்கிறது. திமுக, அதிமுக அல்லாத ஒரு புதிய மாற்று சக்தி தமிழகத்தை ஆள வேண்டும் என்கிற முடிவுக்கு தமிழ்நாட்டு மக்கள் வந்திருக்கிறார்கள் என்பதுதான் 17வது சட்டப்பேரவை தேர்தலுடைய மிக முக்கியமான முடிவு. இரண்டாவது, ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு மனப்போக்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே இருந்திருக்கிறது. ஆகவே ஆளுங்கட்சிக்கு எதிராக அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் தமிழ்நாட்டு மக்களுடைய தீர்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு தான் சாதகமாக இருக்கிறதே தவிர திமுகவுக்கோ அதிமுகவுக்கோ இல்லை. ஆகவே தமிழக வெற்றி கழகத்திற்கு நாம் ஆதரவு தெரிவிப்பது என்கிற முடிவை நாங்கள் எடுத்தோம். அந்த அடிப்படையில் தான் நிபந்தனையற்ற, அமைச்சரவையில் பங்கேற்காமால், வெளியிலிருந்து ஆதரவு என்கிற முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
அமைச்சரவையில் இடம் பெறாதது ஏன்?
இப்போது கூட சில நண்பர்கள்… ‘விசிக சேர்ந்துருச்சு, கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தால் நல்லா இருக்குமே’னு சொன்னார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை அமைச்சரவையில் பங்கு ஏற்கிறோம் என்று சொன்னால், நம்முடைய மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரச்சனைகளை எடுத்து சொன்னால் அது ஏற்கப்படுகிற ஒரு செல்வாக்கு என்பது அதில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை இப்போது இல்லை. சிபிஎம்க்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், சிபிஐக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்.
ஆகவே 35 பேர் இருக்கக்கூடிய ஒரு அமைச்சரவையில் ஒரே ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அமைச்சரோ, ஒரே ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அமைச்சரோ கருத்துக்களை சொல்லலாமே தவிர, அது ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது” என்று கூறினார்.
மேலும் அவர், “இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் என்ன பொருளாதார கொள்கையை கடைபிடிக்க போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. “நல்லாட்சி தருவேன், மதச்சார்பற்ற அரசாங்கத்தை நான் நடத்துவேன், ஊழலற்ற நேர்மையான அரசாங்கத்தை நடத்துவேன், நீங்கள் விரும்புற மாதிரி ஒரு ஆட்சி இருக்கும் தோழர்” என்று முதல்வர் விஜய் எங்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.
அந்த அடிப்படையில் தான் நாங்களும் ஆதரவை தெரிவித்திருக்கிறோம். ஒரு மதச்சார்பற்ற அரசு தமிழகத்திலே நீடிக்க வேண்டும் என்பதில் எல்லோரையும் விட ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிற இயக்கம் கம்யூனிஸ்ட்கள்.
அதே நேரத்தில் பொருளாதார கொள்கை என்பது மிக முக்கியமானது. பொருளாதார கொள்கைதான் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி, முன்னேற்றம், மக்களுடைய வாழ்க்கையிலே மறுவளர்ச்சியை ஏற்படுத்துவது. எல்லாவற்றுக்கும் அவர்கள் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள், சட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் எல்லாவற்றோடும் ஒன்றோடு ஒன்று பின் பிணைந்திருக்கக்கூடிய விஷயங்கள், ஆகவே அதில் என்ன வகையான பொருளாதார கொள்கையை அவர் கடைபிடிக்க போகிறார் என்பது இன்னமும் தெரியவரவில்லை. ஒருவேளை அவர்கள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கிற போது அது பற்றி எல்லாம் தெரிய வரலாம்.
இன்றைக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்திருக்கிறது. விவசாயிகளுடைய எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம், ‘இது என்ன இவ்வளவுதான் தள்ளுபடி பண்ணிருக்கார்’னு வருத்தம் கூட உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால் இது முதல் கட்ட நடவடிக்கை… ஏனென்றால் இப்போது மத்திய அரசாங்கம் அல்லது ரிசர்வ் வங்கி உடனடியாக கடனை வசூலிக்க வேண்டும். அதற்கான நோட்டீஸ்களை விவசாயிகளுக்கெல்லாம் அனுப்பக்கூடிய காரியத்தை கூட்டுறவு துறை அதிகாரிகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நீங்கள் கடனை கட்ட வேண்டும், இல்லையென்றால் ஜப்திக்கு உட்படுத்தப்பட வேண்டும், புதிதாக நீங்கள் கடனை பெற முடியாது. இதுபோன்ற பலவிதமான சிக்கல்களை இந்த நிலைமை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தினால், உடனடியாக இன்றைய தினம் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்” என்றார்.
6 மாதம் அவகாசம் கொடுங்க…
திமுகவினர் பற்றி பேசிய அவர், “முன்னாள் முதல்வர் தோற்றுவிட்டார்… ரொம்ப வருத்தம்தான். ஒரு கட்சி தோற்பது வேறு விஷயம். தொகுதிக்கு நல்லது செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். பார்த்து பார்த்து செய்தார். சென்னைக்கு டூர் வருவது போல. கொளத்தூருக்கு ஒரு டூர் போகலாம். எம்.ஜி.ஆர் சமாதியை பார்க்கிற மாதிரி கொளத்தூர் தொகுதிக்கு போய் பாருங்க. அவரை விட வேறு எந்த எம்.எல்.ஏ.வும், எந்த தொகுதிக்கும் செய்துவிடவில்லை.
மக்கள் நினைத்தால் எவ்வளவு செஞ்சாலும் தூக்கி வீசிருவாங்க என்பதற்கு கொளத்தூர் உதாரணம். அவரை போன்றவர்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்கள் இருப்பதன் மூலம், இப்போது ஆளுபவர்களை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கான முன்னேற்றகரமான திட்டங்களை வகுக்க வைப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்.
ஸ்டாலின் தோற்றது உண்மையிலேயே பெரிய வருத்தத்துக்குரிய ஒரு விஷயம், அந்த முறையில் தான் மறுநாள் நாங்கள் சந்திப்பதற்கு சென்றோம், அப்போது அவர் இப்படித்தான் தெரிவித்தார்.
இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக செயல்பட்டோம். இனி சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம் . புதிதாக ஆட்சி அமைப்பவருக்கு 6 மாதம் அவகாசம் அளிப்போம். அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அதன்பின் விமர்சிப்போம் என்றார். ஆனால் அன்று ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்களின் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை.
ஒவ்வொன்றிலேயும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடிய காரியத்திலே இருக்கிறார்கள். கடந்த முறை முதல் முதலாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார், நிதானமாக, பொறுமையாக ஒவ்வொன்றையும் செய்தார்கள். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றவில்லை. ஐந்தாவது ஆண்டில்தான் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொன்றையும் என்னால் சொல்ல முடியும். ஆகவே ஒரு உரிய அவகாசத்தை எந்த ஒரு ஆளும் கட்சிக்கும் தர வேண்டும், அந்த பொறுமை என்பது மக்களுக்கு தேவை” என்று குறிப்பிட்டார்.









