கடலூரில் முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (மார்ச் 21) கைது செய்யப்பட்டுள்ளார். cpim secretary pe shanmugam arrest
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 160 ஏக்கர் அரசு நிலத்தில் விவசாயிகள் முந்திரி காடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அங்கு தோல் தொழிற்சாலை வர உள்ள நிலையில், அந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அங்குள்ள முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே இடத்தில் மீண்டும் முந்திரி கன்றுகள் நடும் போராட்டம் மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். எனினும் இந்த போராட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டு, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

எனினும் அதையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அப்பகுதியில் இன்று குவிந்தனர். மேலும் இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து, மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட அவரது கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.