திண்டுக்கல்லில் சிபிஎம் மற்றும் இந்து முன்னணிடையே மோதல் போக்கு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது. CPI(M) and Hindu munnani clash at dindugul
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன் 20) காலை முதல் சிபிஎம் கட்சியினர், மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியில் தொடங்கிய இந்த பிரசார கூட்டம் தாடிக்கொம்பு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது சிபிஎம் மற்றும் இந்து முன்னணியினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளைச் சேர்ந்தவரிடையேயான கைகலப்பில் சிலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஎம் கட்சியினர் திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாடிக்கொம்பு மோதலில் காயமடைந்த சிபிஎம், இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களைப் பார்க்க சிபிஎம், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் வந்தனர். அப்போது, இருதரப்பும் மாறி மாறி கோஷம் போட லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டு அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் திண்டுக்கல்லில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
