எஸ்.வி.ராஜதுரை
தமிழகத்தின் மூத்த குடிமக்களிலொருவரும் அனைத்துக் கட்சியினராலும் ( பாஜக வினரும் இதில் இருக்கிறார்கள் என நம்புகிறேன்) மதிக்கப்படுபவருமான தோழர் ஆர். என். நல்லக்கண்ணு (ஆர்.என்.கே.), ஆவடியிலுள்ள காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
அந்தப் புகாரின் உள்ளடக்கம் பற்றி நமக்குத் தெரிவதெல்லாம், தமிழகத்திலுள்ள மிகப் பெரும் புத்தக வெளியீட்டு நிறுவனங்களிலொன்றான நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் இருப்பவைதான்.
அதாவது, ஆர்.என்.கேவின் புகாரின் பேரில் (அதன் அடிப்படையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் காவல் துறையால் தயாரிக்கப்படவில்லை) ஆவடியிலுள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட மேலாண் இயக்குநர் ஊரில் இல்லாததால், அந்த நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பனியாற்றும் இரத்தினசபாபதி அங்கு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்.
தோழர் ஆர்.என்.கே., அந்த நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளையும் வேறு சிலருடைய பங்குகளையும், மேலாண் இயக்குநர் அச்சுறுத்தியோ, நிர்பந்தம் செய்தோ, அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறியோ தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக புகார் கொடுத்துள்ளார் என்று அங்கிருந்த காவல் துறை அதிகாரியொருவர் கூறியதை மறுக்கும் வண்ணம், அந்தப் புகாருக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை அந்த விற்பனை மேலாளர் தக்க ஆவணங்களை காட்டி விளக்கிக் கூறியிருக்கிறார்.
ஆனால் 10.5.2023 அன்று காலை 6 மணிக்கு அம்பத்தூரிலுள்ள என்.சி.பி.எச். நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த இரத்தினசபாபதியையும், அந்த நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை மேலாளர் பண்டரிநாதனையும் மட்டுமின்றி, சண்முகம் சரவணன் வீட்டுக்குச் சென்று அவரது மைத்துனரையும் கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர் என்பதையும்,
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 41-A வை மீறும் வகையிலும் முதல் தகவல் அறிக்கை, அரெஸ்ட் மெமோ ஆகிய ஏதுமின்றியும் இந்தக் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது என்பதையும், அதுமட்டுமின்றி, சண்முகம் சரவணனின் 18 வயது மகனையும் கைது செய்ய முயன்றிருக்கின்றனர் என்பதையும்,
அவன் நேற்று (10.5.2023) லயோலா கல்லூரியில் தேர்வு எழுத வேண்டியிருப்பதாகச் சொன்னவுடன் அவனது ஹால் டிக்கெட்டின் புகைப்படப் பிரதியை எடுத்துக் கொண்டு அவனை விட்டுவிட்டனர் என்பதையும் உயர்நீதி மன்றத்தில் சண்முகம் சரவணன் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரத்தினசபாபதியையும் மற்ற இருவரையும் மாலை 7 மணிவரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்த காவல் துறையினர் அவர்களிடம் முதல் தகவல் அறிக்கை எதனையும் தரவில்லை.
அவர்களைப் பார்க்கச் சென்ற வழக்குரைஞரிடமும்கூட இரத்தினசபாபதி மீது புகார் கொடுத்தவர் யார், அவரது தகுதி என்ன, அந்தப் புகார் மனுவில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் காவல் துறையினர் தெரிவிக்கவில்லை.
ஆனால், இரத்தினசபாபதியுடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரையும் விடுவித்துவிட்டு இரத்தினசபாபதியை மட்டும் ரிமாண்ட் செய்ய சம்பந்தப்பட்ட நீதிபதியின் வீட்டுக்கு நேற்று பின்னிரவு 12.45 மணி போல அழைத்துச் சென்று ரிமாண்ட் செய்ய உத்தரவு பெற்றனர். அந்த இரவில் ரிமாண்ட் செய்யும் அளவிற்கு அவர் தீவிரவாதியா தேசத்துரோகம் செய்தவரா? அவ்வளவு அவசரம் ஏன்?. என்கிற கேள்வி எழுகிறது.
இவை ஒருபுறமிருக்க , சில நாள்களுக்கு முன் சீருடை அணியாத காவல் துறையினர் அதி காலையில் சரவணன் சண்முகம் இல்லாத சமயத்தில் அவருடைய வீட்டுக்குச் சென்று, எந்தவிதமான ஆவணங்களும் ( search warrant) இல்லாமல் பெண்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்த அந்த வீட்டு அறைகள் ஒவ்வொன்றையும் சோதனையிட்டுள்ளனர்.
காவல் துறையினர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலுள்ள ஒரு கட்சி என்ற வகையில் தங்கள் செல்வாக்கையும் தோழர் ஆர்.என்.கேவுக்கு உள்ள நற்பெயரையும் பயன்படுத்தி சிபிஐ கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் காவல் துறைக்கு நிர்பந்தம் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க வேண்டியுள்ளது.
இந்த ஊகம் எனக்குத் தோன்றியதற்குக் காரணம் உயர் நீதி மன்றம் முத்தரசன் மற்றும் ஐவர் என்.சி.பி.எச்.நிறுவன விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பதுதான். முத்தரசனும் பிற ஐந்து பேரில் இருவரும் என்.சி.பிஎச். நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றாலும் முத்தரசனுக்கு அந்த நிறுவனத்தில் எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் ஒருவருக்கு மட்டும் 200 பங்குகளிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்த நிறுவனத்தைப் பற்றிய சில உண்மைகளைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1951ஆம் ஆண்டு அந்த நிறுவனம் ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாம்பவான்களாக இருந்த தோழர்கள் ப.சீனிவாச ராவ், ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பி.சிந்தன் ஆகியோரின் சிறு முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்டதாகும். அதன் நோக்கம் கம்யூனிஸ்ட் கருத்துகளைப் பரப்புவதற்கான நூல்களை வெளியிடுவதே.
ஆனால் கட்சி இரண்டாக உடைந்ததும் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமனும் வி.பி.சிந்தனும் என்.சி.பி.எச். நிறுவனத்தில் இருக்கவில்லை. எனவே அதில் முழுக்க முழுக்க சோவியத் ஆதரவு நிலைப்பட்டை மேற்கொண்ட சிபிஐயைச் சேர்ந்த இயக்குநர்களே நியமிக்கப்பட்டனர். அந்த நிறுவனம் சிபிஐக்கு சொந்தமானதோ அல்லது அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியதோ அல்ல.
அந்த நிறுவனம் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தார்மிகரீதியாகத் தொடர்புடையது என்ற அளவிலேயே சிபிஐக்கு அதில் செல்வாக்கு இருந்ததேயன்றி வேறு எந்தக் காரணமும் இல்லை. நியாயமாகப் பார்த்தால் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களும்கூட இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சோவியத் யூனியனிலிருந்து இலவசமாக அனுப்பப்பட்ட புத்தகங்களை விற்பதன் மூலமே அந்த நிறுவனத்தின் வருவாயில் பெரும்பகுதி இருந்து வந்தது. சோவியத் யூனியன் தகர்ந்து விழுந்தவுடன் கம்யூனிஸ்ட் அல்லாத நூல்களையும் பல்வேறு அறிஞர்களின் நூல்களையும் வெளியிட்டு வந்ததன் மூலமே அந்த நிறுவனம் தாக்குப் பிடித்துவந்தது.
தோழர் ஆர்.என்.கே.வால் மேலாண் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிறகு ஆயுள்காலத்திற்கும் அந்தப் பதவியை வகிக்கும்படி செய்யப்பட்ட சண்முகம் சரவணன் அந்த நிறுவனத்திற்கு ஏறத்தாழ பத்து கிளைகளை உருவாக்கியதுடன் கட்டடங்கள் முதலிய சொத்துகளையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்.
ஏறத்தாழ 400 பேர் பணியாற்றும் அந்த நிறுவனத்தில் கோவிட்-9 தொற்று நோய்க்காலத்தில் வணிகம் தொய்வடைந்திருந்த நிலையிலும்கூட அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியம் தரப்பட்டது, எழுத்தாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆண்டு தோறும் உரிமத் தொகைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.
மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து ஒப்பந்தம் பெற்று பாட நூல்கள் அச்சடித்து வெளியிடுவது, கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் புத்தக விற்பனை அதிகரித்தது. விறபனையை அதிகரிக்கச் செய்வதில் இரத்தினசபாபதிக்கும் முக்கியப் பாத்திரம் உள்ளது. இவற்றை நடுநிலையாளர்கள் அனைவரும் அறிவர்.
நல்ல ஆதாயம் ஈட்டும் அந்த நிறுவனத்தை கட்சியைச் சேர்ந்த சில சுயநலமிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் செய்து வந்ததாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் பரவிவந்தன.
அந்த சுயநலமிகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரைக் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முயன்றனர் என்றும், பணக் கையாடல் போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக மேலாண் இயக்குநரால் தண்டிக்கப்பட்ட சிலரைப் பாதுகாப்பதற்காகப் பல முயற்சிகளைச் செய்து வந்தனர் என்ற வதந்திகளும் பரவி வந்தன.
அந்தச் சூழ்நிலையில்தான் என்.சி.பி.எச். அலுவலகத்தில் நுழைவதற்கு உரிமை உள்ள முத்தரசனும் வேறு ஓரிருவரையும் தவிர அந்த நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத கட்சிக்காரர்கள் அங்கு சென்று சண்முகம் சரவணன் தன் பங்குகளைக் கட்சிக்காரர்களுக்கு மாற்றித் தரவேண்டும் என்ற மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிலொருவர் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா.
இதில் வேடிக்கை என்னவென்றால் தோழர் நல்லகண்னுவின் பங்குகள் இரண்டாண்டுகளுக்கு முன்பே சண்முகம் சரவணனுக்கு முறைப்படி மாற்றப்பட்டன என்பதும், ஆனால் அந்த இரண்டாண்டுக் காலத்தில் தோழர் நல்லக்கண்ணு எந்த மோசடிப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், அந்தப் பங்குகள் சரவணன் சண்முகத்திற்கு மாற்றிக் கொடுத்ததுடன் அவரை ஆயுள்கால மேலாண் இயக்குராக நியமிக்க தன்னுடைய ஒப்புதலைத் தந்துள்ளதுடன், பிற இயக்குநர்களின் ஒப்புதலையும் பங்குதாரர்களின் வருடாந்திரப் பொதுக்குழுவின் ஒப்புதலையும் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதாகும்.
அந்த நிறுவனத்தின் சட்டதிட்டத்தின்படி இயக்குநர்கள் கூறும் ஆலோசனைகளும் தீர்மானங்களும் பங்குதாரர்களின் பொதுக் குழுக் கூட்டத்தால் ஒப்புதல் தரப்பட வேண்டும். அதன் பிறகுதான் அவை நடைமுறைக்கு வரும். அந்த நிறுவனத்தில் மிக அதிகமான பங்குகளை வைத்திருக்கும் சண்முகம் சரவணனால் அந்த தீர்மானங்களை நிராகரிக்க முடியும்.
தங்கள் கட்சிக்கான ஒரு பத்திரிகையைகூட நடத்த இயலாதவர்களும் முறையான கல்விப் படிப்போ அல்லது ஆழமான புத்தகப் படிப்போ இல்லாதவர்களுமானவர்களின் கைகளுக்கு என்.சி.பி.எச்.நிறுவனம் சென்றுவிட்டால், அது விரைவில் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும் என்பது நிச்சயம்.
எனவே சட்டப்படி அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உரிமை கொண்டாட முடியாதவர்கள், காவல் துறையை அணுகியிருக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன் இரத்தினசபாபதியை ஆவடியிலுள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்திலுள்ள ஆய்வாளரொருவர், தானே முன்வந்து இரத்தினசபாபதியையும் சண்முகம் சரவணனையும் தோழர் ஆர்.என்.கே.வின் வீட்டுக்கு அழைத்துச் சென்று நிறுவனத்தின் பங்குகளை கட்சிக்காரர்களுக்கும் சரவணன் சண்முகம் முதலிய நிர்வாகிகளுக்கும் சரிபாதியாகப் பிரித்துத் தர ஏற்பாடு செய்வதாகக் கூறியதாகவும் அந்த யோசனையை மேலாண் இயக்குநரைக் கலந்தாலோசிக்காமால் ஏற்றுக்கொள்ள இரத்தினசபாபதி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகுதான் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. திமுகவுடன் தோழமை கொண்டுள்ள கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் சிபிஐ கட்சித் தலைவர்கள் சிலர் காவல் துறையினர் மீது நிர்பந்தம் கொடுத்து என்.சி.பி.எச். நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதையும்,
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரது நூல்களும் பெரியார் பற்றிய நூல்களும்கூட இப்போதுள்ள மேலாண் இயக்குநரின் முன்முயற்சியாலேயே வெளியிடப்பட்டுள்ளன என்பதையும் காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். எனவே தோழமைக் கட்சிகள் தங்களுக்குள்ள செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவர் முற்றுப் புள்ளிவைக்க வேண்டும்.
சொத்து சம்பந்தமான சிவில் வழக்குகளில் காவல் துறையினர் தலையிடக்கூடாது, அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள்தான் கையாள வேண்டும் என்பது காவல் துறையினருக்கும் தெரியும்.
ஆனால், ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியின் நிர்பந்தத்திற்கு உட்பட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையின் மீது நிர்பந்தம் செய்ததற்கும் மேற்சொன்ன அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கும் தோழர் ஆர்.என்.கே. தார்மிகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உரிமைகளுக்குக் குரல்கொடுக்க வேண்டிய ஒரு கம்யூனிஸ்ட் செய்கின்ற வேலையா இது என்று அவர் தன்னைத்தானேயும் கட்சிக்காரர்களையும் கேட்க வேண்டும். அவர் கொடுத்த புகாரில் உண்மை இருக்கலாம். ஆனால் அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட அதர்மச் செயல்களுக்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் முதல் பேட்டி!
ஓபிஎஸ் -தினகரன் சந்திப்பு… மாயமானும் மண்குதிரையும்: எடப்பாடி கிண்டல்!

Comments are closed.