இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு இன்று தொடங்கி வரும் 18 வரை நடைபெற உள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு கலையரங்கில் தொடங்கிய மாநாட்டில் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை அக்கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி ஏற்றி வைத்தார்.
தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, அமர்ஜித் கவுர், டாக்டர் கே.நாராயணா, ஆனி ராஜா, சி.எச். வெங்கடாசலம், டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர். நாளை மாலை மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார்.
மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சிபிஐ (மா-லெ-விடுதலை) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
ஆகஸ்ட் 18ம் தேதி மாநாட்டு பேரணி சேலம் போஸ் மைதானத்தில் பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
