சிறப்புக் கட்டுரை: தலைதெறிக்கும் ஆராய்ச்சி – நம்பிக்கை தரும் தடுப்பூசி

Published On:

| By Balaji

கேத்தரின் ஜெ.வு

கோவிட்-19 கொள்ளை நோயை எவ்வளவு விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது ஒரு நபரின் தொற்று நோய் முடிவுக்கு வந்து, அவர் நல்ல ஆரோக்கிய நிலைக்குத் திரும்பிய பிறகு அந்த நபரின் நோய்த் தடுப்பாற்றல் (Immunity – நோய் எதிர்ப்பு சக்தி) இந்நோய்க்குக் காரணமான வைரஸான சார்ஸ்-சி.ஓ.வி-2 என்ற வைரஸை நினைவில் நிறுத்தி எதிர்வரும் நாட்களில் எவ்வளவு நன்றாக அதை இனங்கண்டு கொள்கிறது என்பதைப் பொறுத்தது.

ADVERTISEMENT

இதற்கு மனித நோய் எதிர்ப்பு சக்தி நினைவாற்றல் என்று பெயர். நம்மை ஏற்கனவே பாதித்த ஒரு நுண்ணுயிரியால் மீண்டும் தொற்று நோய் வருவதைத் தடுக்க இது உதவுகிறது. உயிர்காக்கும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் வீரியத்தை இது அதிகரிக்கிறது. நச்சு உயிரிகளுக்குத் தொற்று பீடிப்பதற்கான உறைவிட உயிர் வகைகள் (Hosts – நச்சு உயிரியைத் தாங்கிச்செல்லும் மனிதர்கள், சில வகை மிருகங்கள், வௌவால்கள் போன்றவை) கிடைக்காமல் செய்வதன் வாயிலாக நோய்த் தடுப்பாற்றல் கொண்ட நபர்கள் நோய்ப் பரவல் சங்கிலியைத் துண்டிப்பதன் மூலம் மக்கள் அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறார்கள்.

சார்ஸ்-சி.ஓ.வி-2 விஷயத்தில் இருக்கும் மனித நோய்த் தடுப்பாற்றல் குறித்த பல கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில் இன்னும் விஞ்ஞானிகளிடம் இல்லை. இப்போதைக்கு இந்த நோய் வந்தவர்களுக்கு அது மீண்டும் வராது எனத் தெரிகிறது. அதுவும் கொள்ளை நோயின் இந்தச் சுற்றில் மீண்டும் வராது எனத் தெரிகிறது. முதல்முறை நோய் வந்த பிறகு குறைந்தது சில வாரங்களுக்காவது நோய்த் தடுப்பு மூலக்கூறுகள் பரிசோதனை மிருகங்களின் உடலில் நீடிக்கின்றன எனச் சிறிய அளவிலான ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் காட்டுகின்றன. ஒரு சில மாதங்களாகத்தான் இந்த வைரஸைப் பற்றியே ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவந்திருக்கிறது என்பதால் சார்ஸ்-சி.ஓ.வி-2க்கு எதிரான நோய்த் தடுப்பு ஆற்றல்கள் எவ்வளவு காலம் நீடிக்குமென அவர்களால் உறுதியாகக் கணிக்க முடியவில்லை.

ADVERTISEMENT

இந்த நோயின் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினியியல் கொள்ளை நோய்ப் பரவல் ஆராய்ச்சியாளரான சி.பிராண்டன் ஒக்புனு கூறுகிறார். “இதுகுறித்த பல விஷயங்களில் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு நீண்ட கால பார்வை கிடைக்கும் வரை தெரியவும் தெரியாது” என்கிறார் அவர்.

மறக்கமுடியாத தொற்று

நோய்க்கிருமி ஒன்று உடலின் நோய்த் தடுப்பு அரண்களைத் தகர்த்து உள்நுழையும்போது அதை எதிர்த்துப் போராட உடலின் நோய்த் தடுப்பு அமைப்பு முறை பல வகை நோய்த் தடுப்பு மூலக்கூறுகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. இவற்றுள் ஒரு உட்பிரிவு வகை எதிர்ப்புக்கூறுகளாகும் (Antibodies – ஊடுருவல் நுண்ணுயிரிகளுக்கு எதிரான எதிர்ப்புக்கூறுகள்). இவை ஊடுருவும் நச்சு உயிரியின் பிரத்யேக அம்சங்களை இனங்கண்டுகொண்டு அந்த ஊடுருவல் நுண்ணுயிரி உடலைவிட்டு வெளியேற்றப்படும் வரை திரும்பத் திரும்ப பல தாக்குதல்களைத் தொடுக்கின்றன. (நோயாளி ஒருவர் சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியால் நோய்வாய்ப்பட்டிருந்தாரா என்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு இந்த எதிர்ப்புக்கூறுகள் உதவும். ஏனெனில் நோய் நீங்கி அந்த நோய்க்கிருமியை இனியும் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலை வந்தாலும் அந்த நோய்க்கிருமிக்கு எதிராக உருவான இந்த எதிர்ப்புக்கூறுகள் என்னவோ உடலில் தொடர்ந்து நீடிக்கும்.)

ADVERTISEMENT

நோய் குணமானபின் எதிர்ப்புக்கூறுகளின் பட்டாளம் எண்ணிக்கையில் குறைந்தாலும் அதே நோய்க்கிருமியை மீண்டும் எதிர்கொண்டால் உடலின் நோய்த் தடுப்பு அமைப்பு எதிர்ப்புக்கூறுகளின் புதிய தொகுப்பை மீண்டும் உருவாக்கும். தீவிர நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே புதிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும். தடுப்பூசிகள் (Vaccines) கிருமியின் பாதிப்பற்ற ஒரு வகையைப் பயன்படுத்தி இதே இயக்கப்போக்கை பாதுகாப்பாக செய்து காட்டுகின்றன. கொடியதொரு நோய்க்கு ஆளாகவேண்டிய அவசியமில்லாமலேயே படையெடுத்து உள்வரும் கிருமிகளை இனங்கண்டு கையாள உடலின் நோய்த் தடுப்பு அமைப்புக்கு அவை கற்றுக் கொடுக்கின்றன.

உடலின் நோய்த் தடுப்பு அமைப்பின் கோணத்திலிருந்து பார்த்தால் சில நோய்க்கிருமிகள் மறக்க முடியாதவை. எடுத்துக்காட்டாக, சின்னம்மையையோ அல்லது போலியோவையோ தோற்றுவிக்கும் வைரஸை ஒருமுறை ஒருவர் எதிர்கொண்டால் அவர் வாழ்நாள் முழுவதும் அவரை அந்நோயிலிருந்து காப்பாற்ற இதுவே போதுமானது. ஆனால், இதர சில நுண்ணுயிரிகளோ குறைந்த அடையாளங்களையே விட்டுச் செல்கின்றன. காரணம் என்னவென்று ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னமும் முற்றிலுமாகப் புலப்படவில்லை.

சாதாரணமான சளி பிடிப்புக்குக் காரணமான நான்கு வகை இதர கொரோனா வைரஸ்கள் விஷயத்தில் இது பொருந்தும் என்கிறார் அமெரிக்க வட கரோலினா மாகாணத்திலுள்ள சேப்பல் ஹில் என்ற இடத்திலுள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரசேல் கிரகாம். இந்த வைரஸ்களுக்கு எதிரான நோய்த் தடுப்பு எதிர்ப்பு சக்தி ஒரு சில மாதங்களிலோ அல்லது ஓரிரு ஆண்டுகளிலோ மங்கி விடுகிறது. எனவே தான் மக்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது.

சார்ஸ்-சி.ஓ.வி-2 என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் மனித நோய்த் தடுப்பு முறை எவ்வாறு இந்த புதிய வைரஸை எதிர்கொள்ளும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னமும் தெரிந்திருக்கவில்லை. கோவிட்-19இல் இருந்து குணமடைந்துவிட்டதாக தென்படும் நபர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனச் சமீப வாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் ஒருமுறை வந்தால் இரண்டாம் முறை வராமல் இது தடுக்காது என்ற ஐயப்பாட்டை இது கிளப்பியுள்ளது. சில நிபுணர்களோ இந்த சோதனை முடிவுகள் நோய் மீண்டும் வந்ததற்கான அறிகுறி அல்ல என்று நினைக்கின்றனர். மாறாக, வைரஸ் அந்த நோயாளிகளின் உடலைவிட்டு ஒருபோதும் சென்றிருக்காது; கண்டறியக்கூடிய மட்டத்தைவிடக் கீழாக தற்காலிகமாகக் குறைந்திருக்கலாம்; நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால், மீண்டும் அதன் வீரியம் அதிகரித்திருக்கும். இந்தப் பரிசோதனைகள்கூட கச்சிதமானவை அல்ல. அவை வெவ்வேறு கட்டங்களில் வைரஸ் இருப்பதாகவோ இல்லாமலிருப்பதாகவோ தவறாகக் காட்டலாம்.

கோவிட்-19 கொள்ளை நோய் அலை இன்னும் நடப்பில் இருப்பதால், “உங்களுக்கு ஏற்கனவே இந்த வைரஸின் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் மீண்டும் இது உங்களை அண்டுமேயானால் உங்களுக்கு பாதுகாப்பு இருக்கக்கூடும்” என்கிறார் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சான் ஸுகேர்பேர்க் உயிரியல் மையத்திலும் நோய்த் தடுப்பியல் (Immunologist) ஆராய்ச்சியாளராகவும் வைரஸியல் ஆராய்ச்சியாளராகவும் (Virologist) உள்ள தையா வாங். அதிகம் மறதிக்குள்ளாகக்கூடிய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான எதிர்ப்புக்கூறுகள்கூட கொள்ளை நோய் நீடிக்கும் வரை அத்தனை காலம் நீடித்து நிலவத் தலைப்படுகின்றன.

சாதாரண ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸைவிட கோவிட்-19 அதிக வீரியத்தைக் கொண்டது. எனவே, இந்தப் புதிய வைரஸைத் துரத்தியடிப்பதற்கான எதிர்ப்புக்கூறுகள் மேலும் நீண்ட காலத்துக்கு நிலவ வாய்ப்புள்ளது. பொதுவாகக் கூறுவதானால், நோய் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த நோய்க் கிருமியின் தன்மைகளை நினைவில்கொள்ள நம் உடல் அதிக ஆதாரங்களைச் செலவிடுகின்றன; நோய்த் தடுப்பு எதிர்வினையும் அந்த அளவுக்கு வலுவானதாகவும் நீண்டகாலத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸியல் ஆராய்ச்சியாளரான அலிசன் ரோடர். 2003இல் கொள்ளை நோயை உருவாக்கிய மற்றொரு கொரோனா வைரஸ் நோயான சார்ஸிடமிருந்து (SARS) மீண்டவர்களுக்கு குணமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்கள் உடலில் எதிர்ப்புக் கூறுகள் இருப்பதாக முந்தைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால், இந்தப் போக்கு நிச்சயமானதொன்று அல்ல. சார்ஸ்-சி.ஓ.வி-2வும்கூட இதே வழியைப் பின்பற்றுமா என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியவில்லை.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகளை வெளியிட்டது. கோவிட்-19இன் மிதமான பாதிப்பிலிருந்து மீண்ட இரு குரங்குகளுக்கு மீண்டும் சார்ஸ்-சி.ஓ.வி-2 தொற்று நோயை ஏற்படுத்த முடியவில்லை என்ற ஆராய்ச்சி முடிவு அது. இந்தக் குரங்குகளின் உடல்களில் ஏற்பட்ட நோய்ப் பாதுகாப்புக்கான காரணங்களை அவற்றின் உடல்களில் உருவான நோய் எதிர்ப்புக்கூறுகள் வரையிலும் ஆராய்ந்தனர். முதலில் நோய் வந்தபோது உருவான நோய் எதிர்ப்புக்கூறுகள் பின்னர் மீண்டும் அந்த நோயை வரவிடவில்லை. கோவிட்-19 நோய் வந்த மனிதர்கள் விஷயத்திலும் இதேபோல எதிர்ப்புக்கூறுகள் காணப்பட்டன.

ஆனால், எதிர்ப்புக்கூறுகள் இருப்பது மட்டுமே பாதுகாப்பை உத்தரவாதம் செய்யாது என்கிறார் வாங். சாதாரண ஜலதோஷத்தை உருவாக்கும் கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்டு அவற்றுக்கெதிரான எதிர்ப்புக்கூறுகளைக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மீண்டும் அதே தொற்றுநோய் ஏற்படலாம். ஒரு நபரின் வயது அவரது மரபணு அமைப்பு ஆகிய பல இதர காரணிகளும் நோய்த் தடுப்பு எதிர்வினைமீது செல்வாக்கு செலுத்தி அதை மாற்றியமைக்கலாம்.

இன்னும் பரிணாம வளர்ச்சியிலுள்ள ஒரு வைரஸா?

சார்ஸ்-சி.ஓ.வி-2 உயிரியல் அமைப்பே நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. விதிப்படி பார்த்தால் வைரஸ்கள் தம் அளவில் உயிரிகள் அல்ல. தங்களை இனம்பெருக்கிக்கொள்வதற்கான மரபணு மட்டத்திலான உத்தரவுகள் அவற்றிலிருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான மூலக்கூறு கருவிகள் அவற்றிடம் இல்லை. தங்களை இனப்பெருக்கிக்கொள்ள உயிரோடு இருக்கும் ஏனைய செல்களை அவை கவர்ந்து செல்ல வேண்டும்.

ஏனைய செல்களுக்கு இந்த நோய்க்கிருமிகள் பரவிய பிறகு அவற்றின் மரபணுத் தொகுப்புகள் (Genomes) தாறுமாறாகப் பெருகுகின்றன. புதிய பிரதிகளில் மரபணு மாற்றங்கள் (Genetic Mutations) அடிக்கடி நடைபெற இது வழிவகுக்கிறது. இந்த மாற்றங்களில் பெரும்பான்மையானவை முக்கியத்துவம் எதுவும் கொண்டவை அல்ல. பரிணாம வளர்ச்சியில் முட்டுச்சந்துகளுக்கு நிகரானவை. ஆனால், அரிய சில சந்தர்ப்பங்களில் ஒரு வைரஸின் வகையினக் கட்டமைப்பை இந்த மாற்றங்கள் பாரதூரமான அளவுக்கு மாற்றிவிடும். எந்த அளவுக்கு என்றால் நோய்த் தடுப்பு அமைப்பு முறை அதை இனங்காண முடியாத அளவுக்கு அதை மாற்றிவிடும். இதனால் புதியதொரு வைரஸ் கொள்ளை நோய் உருவாகும். இந்த வைரஸின் முந்தைய பதிப்பின் கொள்ளவு நோயை ஏற்கனவே கண்டுள்ள மக்கள் மத்தியிலும் இந்தப் புதிய கொள்ளை நோய் உருவாகும். இன்ஃப்ளூயன்ஸா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் இத்தகைய தீவிர மாற்றங்களுக்கு முன்மாதிரிகளாக விளங்கும் எடுத்துக்காட்டுகளாகும். ஆண்டுதோறும் புதிய ஃப்ளூ தடுப்பூசிகளை விஞ்ஞானிகள் உருவாக்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நோய்த் தடுப்பு மெக்கானிஸத்தை ஏய்க்கும் மற்றொரு தந்திரமும் சில வைரஸ்களிடம் உண்டு. ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு மரபணு வகையினங்களைச் சேர்ந்த ஃப்ளூ உருவாகுமேயானால், அந்த இரு வைரஸ்களும் தங்களது மரபணு சமாச்சாரங்களை பரஸ்பரம் ஒன்றோடொன்று பரிமாறிக்கொண்டு ஒரு புதிய கலப்பு மரபணு வகையினத்தை உருவாக்குகின்றன. அது தன்னைத் தோற்றுவித்த இரு மரபணு வகையினங்களிடமிருந்தும் மாறுபட்டதாக இருக்கும். இது உடலின் நோய் பாதுகாப்புக் கட்டமைப்பை ஏய்க்க அதை அனுமதிக்கிறது.

சார்ஸ்-சி.ஓ.வி-2 விஷயத்தில் இதுபோன்ற மாற்றங்கள் எவ்வளவு விரைவாக நிகழும் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இப்போதுவரை தெரியாது. ஃப்ளூ வைரஸ்களில் நிகழ்வதைப்போலன்றி தமது மரபணு கட்டுக்கோப்பைப் பிரதியெடுக்கையில் அதில் அச்சுப்பிழை ஏதும் உள்ளதா என ஆராய்ந்து அவற்றில் ஏற்பட்டிருக்கும் தவறுகளை அந்த இயக்கப்போக்கில் கொரோனா வைரஸ்கள் திருத்திவிடுகின்றன. இந்த இயல்பு வைரஸின் வகையின மாற்றம் (Mutation) ஏற்படும் வேகத்தைக் குறைக்கிறது, நோய்த் தடுப்பு அமைப்பைப் பொறுத்தவரை அவை உருமாறும் இலக்காக இருக்கும் நிலையை ஓரளவுக்குக் குறைக்கிறது என்கிறார் ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிராணிகள் கொரோனா வைரஸ் நிபுணரான ஸ்காட் கென்னி. இருந்தபோதிலும் கொரோனா வைரஸ்கள் தமது அடிப்படை மரபணுக் கட்டமைப்பின் பகுதிகளை பரஸ்பரம் ஒன்றோடொன்று பரிமாறிக் கொள்கின்றன. இது உடலின் நோய்த் தடுப்பு அமைப்பு முறையை ஏய்ப்பதற்கான வாய்ப்புக்குப் பெரிதும் இடமளிக்கிறது.

இதுவரை சார்ஸ்-சி.ஓ.வி-2 கூட உலகெங்கிலும் பரந்திருந்தாலும் தீவிர வகையினை மாற்றத்துக்கு உள்ளானதாகத் தெரியவில்லை. இதற்கு காரணம், ஒரு வெற்றிகரமான ஏய்ப்பு யுக்தியை எது ஏற்கனவே வகுத்துவிட்டபடியால் மீண்டும் தன் செயல் தந்திரத்தை மாற்றவேண்டிய அவசியம் அதற்கு இல்லை. “இப்போதைக்கு அது இந்த வைரஸை எப்போதும் எதிர்கொண்டிராத முற்றிலும் அனுபவமற்ற மக்களை அது காண்கிறது. அவர்களிடமிருந்து வரக்கூடிய எந்தவிதமான எதிர்ப்பு நெருக்கடிக்கும் எதிர்வினை புரிவதாக அது தென்படவில்லை” என்கிறார் திருமதி ரசேல் கிரகாம்.

இரண்டாவது சார்ஸ்-சி.ஓ.வி-2 தொற்று அலை ஒன்று வீச நேர்ந்தாலும் சில காலத்துக்கு அது நிகழாது. துரிதமாக மரபணு வகையின மாற்றமடையும் இன்ஃப்ளூயன்ஸா வகையினங்கள்கூட மக்களிடையே மறு உலா வர ஆண்டுக்கணக்கில் ஆகும். கோவிட்-19 விஷயத்தில்கூட அந்த நாள் வருமேயானால், எதிர்கால கோவிட்-19 கொள்ளை நோய் பரவல்கள் மிதமானதாக இருக்கும். சில நேரங்களில் வைரஸின் வெற்றி என்பது உறைவிட உயிர் வகைகளோடு இலகுவாகப் பயணிப்பது என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேத்தரின் பிரீஜ்.

தீவிர நோயை உருவாக்கும் வைரஸ்கள் விரைவிலேயே மடிந்துபோகின்றன. ஏனெனில் நோய்வாய்ப்பட்ட உறைவிட உயிர்வகை அதைத் தொடர்ந்து பரப்ப முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் சில நேரங்களில் கொள்ளை நோய் விரைவிலேயே தளர்ந்து போய்விடுகிறது என்கிறார் அவர்.

ஆனால், வைரஸின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் சார்ஸ்-சி.ஓ.வி-2 மாறக்கூடும் என்ற வாய்ப்பை நாம் நிராகரிக்க இயலாது என்கிறார் கென்னே. எதிர்வரக்கூடியதை எதிர்கொள்ளும் அளவுக்கு நாம் மக்களுக்கு உரமேற்ற “இவ்வகை கொள்ளை நோய் விஷயத்தில் எதிலும் நம்பிக்கையற்றவராகத்தான் நாம் விஷயங்களை அணுக வேண்டும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

நோயில்லாமல் பாதுகாப்பு

கோவிட்-19ஐப் பற்றி பல விஷயங்கள் அறியப்படாமல் இருந்தாலும் உலகின் கூட்டுத் தடுப்பு சக்தியைப் பெருக்க தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் விரைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் வைரஸ் பரவுவதைத் தடுத்து நிறுத்தும்.

“தடுப்பூசியை வளர்த்தெடுப்பது இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான விஷயமாக விளங்கப்போகிறது” என்கிறார் வாங். ஒரு கூடுதல் நடவடிக்கையாக சார்ஸ்-சி.ஓ.வி-2 திரும்பி வருமேயானால் இது மிக மிக முக்கியம். “என்றும் நிலவக்கூடிய ஒரு நோய்க்கிருமியாக அது இருக்குமேயானால் நமது ஆயுத தளவாடத்தில் தடுப்பூசி கண்டிப்பாகத் தேவை” என்கிறார் அவர்.

பன்றிகள் போன்ற இதர பிராணிகளில் ஏற்படும் இதர வகை கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட ஓரளவுக்குத் திறம்பட செயல்படும் தடுப்பூசிகளைத் தயார் செய்வதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். “இந்தப் பிராணிகளில் நோய்த் தடுப்பு சக்தி பல மாதங்களுக்கு அல்லது இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கிறது” என்கிறார் ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ் நிபுணர் குய்ஹாங் வாங். (ஆராய்ச்சிக் களங்களாக விளங்குபவை பல கால்நடைகளாக இருப்பதால், மேலும் நீண்ட காலத்துக்கு அவற்றை பரிசோதனைக்குள்ளாக்கும் அளவுக்கு அவை உயிரோடிருப்பதில்லை.) இந்தத் தடுப்பூசிகள் நம்பிக்கைக்குக் காரணமாக உள்ளன என்கின்ற அவர், “மனிதர்களும் விலங்குகள்தானே” என்று சுட்டிக்காட்டுகிறார்.

இரண்டு ஃப்ளூ வைரஸ்கள் ஒரே உறைவிட உயிர் வகையின் செல்லை பீடிக்கலாம். அவை தம்மில் உள்ள உட்கூறுகளை அந்த செல்லில் கொட்டும்போது அவற்றின் மரபணு உட்கூறுகள் மீண்டும் இணைந்து அவற்றை உருவாக்கிய முந்தைய வைரஸ்களின் கலவையாக உள்ள ஒரு புதிய கலப்பு வைரஸைத் தோற்றுவிக்கலாம். (ரெபேக்கா சென்ப்ட், சைன்ஸ் இன் தி நியூஸ்)

மனித செல்களைத் திறந்து அவற்றுக்குள் நுழைய வைரஸ் பயன்படுத்தும் திறவுகோல் மூலக்கூறாக விளங்கும் சார்ஸ்-சி.ஓ.வி-2இன் துருத்திகளின் புரோட்டினைத் தாக்கும் எதிர்ப்புக்கூறுகளின் உற்பத்தியைக் கட்டவிழ்த்துவிடக்கூடிய மனித தடுப்பூசிகளை பல ஆராய்ச்சிக்குழுக்கள் வடித்தெடுத்து வருகின்றனர். வைரல் நோய் பரவ இந்த வைரஸின் துருத்தி போன்ற பகுதிகளின் புரோட்டின் மிகவும் முக்கியமானது என்பதால் தடுப்பூசிக்கு இது மிகச்சிறந்த இலக்காக உள்ளது என்கிறார் மவுன்ட் சினாயில் உள்ள இகேன் மருத்துவப் பள்ளியைச் சார்ந்த வைரஸியல் ஆராய்ச்சியாளரான பென்ஹர் லீ என்பவர். ஆனால், வைரஸின் இதர அங்கங்களைப் போலவே துருத்திகளின் புரோட்டினும் மாற்றமடையத்தக்கவை. இது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஒரு நபருக்கு வைரஸ் வராமல் தடுக்கக்கூடிய ஆற்றலை நிலைகுலையச் செய்யும் என்பதையும் லீ சுட்டிக்காட்டுகிறார்.

உருமாற்றம் அந்த அளவுக்குத் தொடர்ந்து நிகழுமேயானால், விஞ்ஞானிகள் ஃப்ளூ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நோய்க்கிருமிகள் விஷயத்தில் செய்ததுபோல கோவிட்-19 தடுப்பூசிகளை அடிக்கடி மாற்றியமைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் வாங். “புதியதோர் நோய்ப்பரவல் நிகழுமேயானால் நாம் புதிதாக தொடங்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

இருப்பினும் அப்படித்தான் நடக்கும் என இப்போதே கூற முடியாது என எச்சரிக்கிறார் வாங். உலகெங்கிலும் தலைதெறிக்கும் வேகத்தில் ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் சார்ஸ்-சி.ஓ.வி-2இன் பல வடிவங்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய அனைத்துக்கும் பொதுவானதொரு தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம்.

ஆனால், செயல் திறனையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்ய கடும் பரிசோதனையைக் கோரும் தடுப்பூசிகளை வளர்த்தெடுக்க நீண்ட காலம், வழக்கமாக ஓராண்டுக்கும் மேல், தேவைப்படுகிறது என்கிறார் குய்ஹாங் வாங். இதற்கிடையே, நோய் ஏற்கனவே தொற்றிக்கொண்டுள்ளவர்களைக் காப்பாற்ற தக்க சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பது பற்றி விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர்.

சார்ஸ்-சி.ஓ.வி-2 தொற்றுநோய் ஏற்கனவே தொடங்கிய பிறகு வழக்கமாக வைரஸின் தொற்று நோய் சுழற்சி இயக்கத்தில் தலையிடுவது மூலம் மேற்கொள்ள வேண்டிய சில தீர்வுகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தவிர்க்க இயலாமல் தேவைப்படும்.

ஆனால், நீண்டகாலம் நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றோர் அணுகுமுறை உடலின் நோய்த் தடுப்பு எதிர்வினையையே பயன்படுத்துகிறது. குணமான நோயாளிகளிடமிருந்து நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவையும் அதில் அடங்கியிருக்கும் நோயைத் துரத்தியடிக்கும் எதிர்க்கூறுகளையும் செலுத்துவது (ரத்த மாற்றுக்கு நிகரான பிளாஸ்மா மாற்று) என்ற முறை அது. இந்தக் கொள்ளை நோய் விஷயத்தில் இது புதிது என்றாலும் இந்த சிகிச்சை முறை 1890களிலிருந்தே பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 2003இல் சார்ஸ் நோய் பரவியபோதும் 2014இல் எபோலா நோய் பரவிய போதும் அது ஓரளவு வெற்றியையும் கண்டது. தங்கள் உடலில் வைரஸுக்கான அறிகுறிகளோ அல்லது வைரஸோ இல்லாத பிளாஸ்மா தானம் செய்ய முன்வரும் ஆரோக்கியமான நபர்களை அணிதிரட்ட நியூயார்க்கில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நபர்களின் நோய்த் தடுப்பு அமைப்புகள் அதிக எதிர்க்கூறுகளை உற்பத்தி செய்ய பழக்கிக்கொண்டுள்ளதால் சார்ஸ்-சி.ஓ.வி-2 விஷயத்தில் இவ்வாறு தானம் கொடுக்க முன்வருபவர்களின் சொந்த எதிர்ப்பு சக்தியை இது குறைப்பதில்லை என்பது மிக முக்கியமான விஷயமாகும்.

நோய் எதிர்ப்புக் கூறுகள் காலப்போக்கில் வீரியமிழக்கும். இங்ஙனம் பிளாஸ்மா மாற்று சிகிச்சை செய்தவர்களை நீண்ட காலம் காப்பாற்றாது. ஆனால், இந்த பிளாஸ்மா மாற்று சிகிச்சை இதைப் பெறுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்புக்குக் கூறுகளின் ஆரம்பத் தொகுப்பு மறைந்த பின் புதிய நோய் எதிர்ப்புக்குக் கூறுகளை உற்பத்தி செய்ய நோய்த் தடுப்பு அமைப்பு முறைக்குக் கற்றுக்கொடுக்கும். ஆனால், இந்த இடைக்கால நடவடிக்கை ஆரோக்கிய பணியாளர்கள் மீதான வேலைப்பளுவைக் குறைக்கும். இந்த நோய் பரவலினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படத்தக்க நபர்களுக்கு மேலும் கால அவகாசத்தை அளிக்கும்.

கொள்ளை நோய் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய ஆராய்ச்சியாளர்கள் முன்னோக்கி பார்க்கின்றனர். இந்த கொள்ளை நோய்க்கு எதிர்வினை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதற்கு முன்னர் வந்த கொள்ளை நோய்களிலிருந்து கற்றுக்கொண்டதுபோல எதிர்வருவது என்ன என்பதற்கு கோவிட்-19 நமக்குக் கற்றுக்கொடுக்கும். இதர மரபணு வகையின கொரோனா வைரஸ்களும் நம் மானுடர் மத்தியில் நுழைவது “தவிர்க்கமுடியாதது” என்கிறார் அவர்.

“அது எங்கு எப்போது நடக்கும் என்பது நமக்குத் தெரியாது” என்கிறார் அவர். ஆனால் அடுத்த சுற்று கொள்ளை நோய் வருவதற்குள் உலகம் அதிக தயார் நிலையில் இருக்கும்.

தமிழில்: பா. சிவராமன்

கட்டுரையாளர் குறிப்பு

கேத்தரின் ஜெ.வு – பாஸ்டனை மையமாகக்கொண்டு செயல்படும் விஞ்ஞான பத்திரிகை நிருபர் மற்றும் ஸ்டோரி கொல்லைடர் என்ற சீரியலின் மூத்த தயாரிப்பாளர். இவரது படைப்புகள் நேஷனல் ஜாக்ராபிக், அன் டார்க் பத்திரிகை, பாப்புலர் சயின்ஸ் உள்ளிட்ட மேலும் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து மைக்ரோபயாலஜியிலும் இம்யுனோபயாலஜியிலும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். சுமித்சோனியன் பத்திரிகையால் 2018ஆம் ஆண்டின் AAAS மாஸ் மீடியா ஃபெல்லோவாக அங்கீகாரம் பெற்றவர்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share